விழுப்புரம் மாவட்டத்தில் 122 அரசு டாஸ்மாக் கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 103 டாஸ்மாக் கடைகளும் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 225 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சாதாரண நாட்களில் தினமும் ரூ.2 கோடிக்கும் அதிகமாக பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனையாகி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தின் அருகிலேயே புதுச்சேரி மாநிலம் இருப்பதாலும் மற்றும் கள்ளச்சந்தையில் மது விற்பனை போன்றவற்றை தாண்டியும் விழுப்புரம் மாவட்டம் டாஸ்மாக் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட 3 மடங்கு அளவிற்கு மதுபானங்கள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது.


தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு மட்டும் ரூ.16 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதாவது தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 23-ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட மது வகைகள் ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கும், தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 8,571 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 4,283 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்தன. இதன் மூலம் ரூ.8 கோடியே 46 லட்சத்து 7 ஆயிரத்து 240 க்கு விற்பனையானது. கடந்த 2021ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 3ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 8,037 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 4,670 அட்டைப்பெட்டிகளும் விற்றுத்தீர்ந்தன.


இதன் மூலம் ரூ.6 கோடியே 9 லட்சத்து 35 ஆயிரத்து 845 க்கும், தீபாவளி பண்டிகையான நவம்பர் 4ந் தேதியன்று பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 9,079 அட்டைப்பெட்டிகளும், பீர் வகைகள் 10,772 அட்டைப்பெட்டிகளும் விற்று தீர்ந்ததன் மூலம் ரூ.7 கோடியே 90 லட்சத்து 29 ஆயிரத்து 130 க்கும் ஆக மொத்தம் 2 நாட்களில் ரூ.13 கோடியே 99 லட்சத்து 64 ஆயிரத்து 975க்கு மது வகைகள் விற்பனையானது. இதனை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மதுபானங்களின் விற்பனை ரூ.1 கோடியே 96 லட்சத்து 42 ஆயிரத்து 265 அளவிற்கு கூடுதலாக விற்பனையாகியுள்ளது.


Also Read | Traffic Rules Fine: அன்று அவ்வளவு.. இன்று இவ்வளவு.. புதிய கட்டண விதிமுறைகளும், அபராதமும்.. முழு விவரம்!