புதுச்சேரி : வில்லியனுாரில் பட்டாசு தீப்பொறியால், மாடியில் கூரை கொட்டகையில் இயங்கி வந்த கோச்சிங் சென்டர் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வில்லியனுார் நவ சன்னதி வீதி - மேற்கு மாடவீதி சந்திப்பில், வீட்டின் இரண்டாம் தளத்தின் மாடியில் கூரை கொட்டகையில் தனியார் கோச்சிங் சென்டர் இயங்கி வருகிறது.


தீபாவளியை முன்னிட்டு நேற்று இரவு 7.10 மணியளவில் அப்பகுதியில் வெடித்த பட்டாசு தீப்பொறி விழுந்ததில், கோச்சிங் சென்டர் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த வில்லியனுார் தீயணைப்பு நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கோச்சிங் சென்டர் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் கோச்சிங் சென்டரில் இருந்த நாற்காலி, மேசை, பீரோ, புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், இதேபோல் தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பெருமாள் கார்டனில் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி சிலர் சாலையில் வெடி வெடித்தனர்.அப்போது அருகில் இருந்த தண்டபாணி, 47, என்பவர் கூரை வீட்டில் தீ பொறி விழுந்தது. அதில் கூரை தீ பிடித்து எரியத் துவங்கியது. உடன் அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் தீ அருகில் உள்ள சிவநாதன்,42  என்பவரின் வீட்டிற்கும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இரு வீடுகளும் முற்றிலுமாக எரிந்ததில், வீடுகளில் இருந்த டி.வி. கம்ப்யூட்டர், பைக் உள்ளிட்ட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தவளக் குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.