கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் ரயில்வே சிக்னல் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போது மண் சரிவில் சிக்கி பரிதமாக உயிர் இழந்துள்ளார். இவருடன் மணலில் சிக்கிய மூன்றுபேர் , சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். வாலாஜா ரயில் நிலையத்தில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர், மண்சரிவில் சிக்கி உயிர் இழந்துள்ளார். 




இராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சிக்னல் கேபிள் பதிக்கும் பணியை ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த சீனிவாசலு பாபு என்பவர் ஒப்பந்தம்  எடுத்துள்ளார். இப்பணியினை மேற்கொள்ள கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களில் கொப்பல் மாவட்டம் எல்லித்தோடி கிராமத்தைச் சேர்ந்த ரவி வயது 36 மற்றும் , இவரது மனைவி மாரியம்மாள் வயது 23 ஆகிய இருவரும் மற்ற தொழிலாளிகளுடன் இனைந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் கேபிள் பதிக்கும்  வேலை செய்து வருகின்றனர் .




இன்று காலை 9 மணி அளவில் கேபிள் பதிப்பதற்கான  பள்ளத்தில் இறங்கி, இணையர் உட்பட 4 தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக மண்சரிந்து 4 பேர் மீதும் விழுந்தது. இதில் ரவி மட்டும் மண்ணில் சிக்கிக்கொண்டார். ரவி மனைவி உட்பட மற்ற மூன்று தொழிலாளர்களும் சிறு காயங்களுடன் தப்பினர். புதையுண்ட ரவியைக் காப்பாற்றும் பணியை மேற்கொண்டு மற்ற தொழிலாளர்கள் , அதே சமயத்தில் காட்பாடி ரயில்வே காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.




தகவலின்பேரில் காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபக் சாற்பத்தி,   அரக்கோணம் ரயில்வே ஆய்வாளர் சத்தூரி மார்க் ,  காட்பாடி எஸ்ஐ எழில்வேந்தன்,  ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை  தீவிரப்படுத்தினர். பள்ளம் மிகவும் ஆழமாக இருக்கவே ரவியை மீட்கும் பணி சிறிது தொய்வு அடைந்தது , எனவே அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு ரவியை  மீட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளி ரவிக்கு உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் சி பி ஆர்  (CPR)  உள்ளிட்ட முதலுதவி அளித்தனர்.




எனினும் அவரிடமிருந்து எந்த அசைவும் காணப்படவில்லை, எனவே அவரை உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அவர் இறந்ததை உறுதி செய்த  வாலாஜா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக, வாலாஜா அரசு மருத்துவமனையில் இயங்கிவரும் பிணவறைக்கு  அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ரவியுடைய மனைவி மற்றும் அவருடன் பணிபுரிந்த மற்ற தொழிலாளர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்