Vellore : வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் கூண்டோடு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சு மலை அடிவாரங்களில் உள்ள கிராமங்களுக்கு லாரி ட்யூப்களின் மூலம் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து, புகார் வந்த நிலையில் மலைப்பகுதிகளில் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் மூலப் பொருட்கள் மற்றும் ஊரல்களை பறிமுதல் செய்து அழித்து வந்தனர். மேலும் கள்ளச்சாராய வழக்கில் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தற்போது மதுவிலக்கு அமலாக்கு காவல் துறையினர் 18 காவலர்கள் (PC )மற்றும் இரண்டு உதவி ஆய்வாளர்கள் (SI ) என 20 காவலர்களை கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்டத்தில் உள்ள காவல்  நிலையங்களில் பணியமத்தியுள்ளார். மேலும் தற்போது புதிதாக 18 காவலர்கள் (PC) மற்றும் 4  உதவிஆய்வாளர்கள் (SI) என 22 காவலர்களை  மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்களாக பணியமத்தியுள்ளார் .கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதாக இவர்கள் கூண்டோடு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், வேலூர் மாவட்ட முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், விற்பவர்மற்றும் கடத்துபவர்கள் பற்றிய தகவல்களை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனின் 6379958321 என்ற வாட்ஸ் அப் எண்ணியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும் என மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


முன்னதாக, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாரயம் குடித்து சுமார் 22 பேர் உயிரிழந்தது பெரும் சர்சையை கிளப்பியது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது.  இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதன்படி,  மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


TN Weather Update: முடிவுக்கு வந்த அக்னி நட்சத்திரம்..! 12 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..! இனிமே எப்படி இருக்கும்?