தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மக்களை வாட்டி வதைத்த நிலையில் நேற்றுடன் கத்திரி வெயில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக தான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை:
30.05.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருத்தணியில் – 40.3 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் – 40 டிகிரி செல்சியஸ், திருச்சியில் – 39.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் – 39 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை – 39.2 டிகிரி செல்சியஸ், கடலூரில் – 38.4 டிகிரி செல்சியஸ், சேலம் – 38.2 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் மற்றும் திருப்பத்தூரில் – 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் – 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது, நுங்கம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
இப்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.05.2023 முதல் 02.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
30.05.2023 மற்றும் 31.05.2023: இலட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
01.06.2023 மற்றும் 02.06.2023: மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.