வேலூர் ( Vellore News): வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணியப்பன் வயது (23). இவருடைய மனைவி செல்வி வயது(21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனால், தலை பிரசவத்திற்காக ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓ.ராஜாபாளைத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு செல்வி சென்றுள்ளார். அங்கு செல்விக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.


 


 




மூன்று மாத குழந்தையை  பாம்பு கடித்தது 


அதனைத் தொடர்ந்து, 3 மாத கை குழந்தையுடன் தனது தாய் வீட்டில் செல்வி தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலையில் குழந்தையை வீட்டில் உள்ள அரையில் தூங்க வைத்து விட்டு வழக்கம்போல் வீட்டு வேலைகளை செல்வி செய்து கொண்டிருந்தனர். அப்போது, தூங்கிக்கொண்டு இருந்த குழந்தை திடீரென அழுதுள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு செல்வி பதறிபோய் வந்து பார்த்தபோது, பாம்பு ஒன்று குழந்தை கடித்து விட்டு அந்த அறைக்குள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக செல்வியின் பெற்றோர் உடனே வீட்டினுள் ஓடிவந்து அறையில் இருந்த குழந்தையை மீட்டு உடனடியாக ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


 


 




பாம்பு கடித்து மூன்று மாத குழந்தை பலி


மேலும் அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டது என்று கூறினர். அப்போது, குழந்தை இறந்த செய்தியை கேட்ட தாய் செல்வி மருத்துவமனையிலேயே கதறி கண்கலங்கி கதறி அழுதுள்ளார். மருத்துவமனையில் இருந்தவர்கள் கண்கலங்கினர். பின்னர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே பிறந்து 3 மாதமே ஆன பச்சிளம் குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.