திருவண்ணாமலை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஊர் மக்கள் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் ஒன்று கூடி சாமி வழிபாடு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அதேபோல அதே கிராமத்தில் ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்தவர்களுக்காக காளியம்மன் திருக்கோவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்தவர்களின் சார்பில் கட்டப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது.


இந்த நிலையில் செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த செந்தமிழுக்கும், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவருக்கும் கடந்த மாதம் முகநூலில் கோயிலுக்குள் செல்வது குறித்து பதிவிட்டு தகராறு ஏற்பட்ட நிலையில், இவர்கள் இரண்டு பேரும் செல்லங்குப்பம் கிராமத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கைகலப்பும் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் பலத்த காயமடைந்த இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், வழக்கு பதிவு செய்த வேட்டவலம் போலீசார் கோயிலுக்குள் நுழைவது குறித்து இரு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் முகநூல் பக்கத்தில் தாக்கிக் கொண்ட விவகாரத்தில் இருவரையும் கைது செய்தனர்.


 




 


இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆதி திராவிடர் சமூகத்தைச் சார்ந்த கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தாங்கள் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயிலுக்குள் சென்று சாமியை வழிபட்டு பொங்கல் இடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் செல்லங்குப்பம் கிராமத்தில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்பிக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயிலில், உயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் மூன்று தலைமுறைகளாக பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் பல்வேறு தடைகள் விதித்தனர்.




 


இந்தநிலையில், ஆகஸ்ட் 2 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி ஐ ஜி முத்துசாமி முன்னிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுருதி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மந்தாகினி, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் உள்ளிட்டோருடன் பட்டியல் இன மக்கள் 200க்கும் மேற்பட்டோர் பொங்கலுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.பின்னர் ஊர்வலமாக அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.


நூறாண்டுகளுக்கு மேலாக கோயிலுக்குள் செல்ல முடியாத பட்டியல் இன மக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று சமத்துவ பொங்கல் வைத்து சாமி தரிசனம் மேற்கொண்டதால் அம்மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படக்கூடிய நிலையில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தீயணைப்பு வாகனங்கள், வஜ்ரா வாகனம் உள்ளிட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு கிராமம் முழுவதும் போடப்பட்டு பட்டியல் இன மக்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.