வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் உட்கோட்டத்தில் உள்ள லத்தேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் உள்பட 12 பேரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்தும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். லத்தேரி பேருந்து நிலையத்தில் முன்னாள் அதிமுக பிரமுகரும் ஜவுளிக்கடை உரிமையாளருமான பாபு என்பவரை லத்தேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரவுடி சதீஷ் குமார் வயது (30) இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். அதனை தட்டிக் கேட்ட லத்தேரி திமுக இளைஞர் அணி ஒன்றிய பொருளாளர் சுதாகர் என்பவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாபு மற்றும் சுதாகர் இருவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாபு மற்றும் சுதாகர் ஆகிய இருவரும் லத்தேரி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.


 




 இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி லத்தேரியில் கடை உரிமையாளர்கள் நேற்று முன்தினம் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குத்துபட்டவர்களும், குத்தியவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் லத்தேரியில் சாதி மோதல் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வந்தது. மேலும் கத்தியால் குத்திய ரவுடி சதீஷ்குமார் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை பிடிக்க தவறியதற்காகவும், இந்த வழக்கில் சரிவர நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், லத்தேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அங்கு பணியாற்றிய காவல் நிலைய ஆய்வாளர் துணை ஆய்வாளர் ரங்கநாதன், பாஸ்கரன், காவலர் வினோத் ஆகியோர் வேலுார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.




 


காவலர்கள் சந்திரசேகரன், தட்சிணாமூர்த்தி, தீர்த்தகிரி, சந்தோஷ், லோகேஸ்வரன், சந்திரசேகரன், ராஜசேகரன், புகழேந்தி ஆகியோர் காட்பாடி காவல் நிலையத்திற்கும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த எஸ்ஐ குமரன் உள்ளிட்ட 10 போலீசாரை லத்தேரி காவல் நிலையத்தில் உடனடியாக பணியில் சேரும்படி எஸ்பி அறிவுறுத்தியுள்ளார். லத்தேரி காவல் நிலையத்தில் கூண்டோடு 12 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அதிரடி நடவடிக்கையால் வேலூர் மாவட்ட காவல்துறையினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.