வேலூர் (Vellore News): ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலியான SC சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற, மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் போலி சாதி சான்றிதழை ரத்து செய்ததாக அவரது வீட்டில் வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.


தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊராக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது.


இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் அல்லது ஆண்  மட்டுமே அதில் போட்டியிட முடியும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் கல்பனா சுரேஷ் என்ற பெண் மனு தாக்கல் செய்தார். அவருக்கு குலுக்கல் முறையில் ஆட்டோ சின்னம் கிடைத்தது.


 




அதன் பிறகு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ்  609 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து தலைவராக உள்ளார். இத்தோளப்பள்ளி ஊராட்சி இம்முறை ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு (ஆண்,பெண்) ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தலைவராக வெற்றி பெற்றுள்ள கல்பனா சுரேஷ் என்பவர் மாற்று சமூகத்தை (இந்து கவரை நாயுடு BC ) சேர்ந்தவர் என்றும் தேர்தல் வேட்புமனுவில் போலியான ஆதிதிராவிடர் (SC) என்ற சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாக தோளப்பள்ளி ஊராட்சியில், அதே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் விழிக்கண் குழு தொடர் விசாரணை நடத்தியதில் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் முறைகேடாக சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது வேப்பங்குப்பம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டத்துடன் அவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.


 




இந்நிலையில், தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனாவுக்கு வழங்கப்பட்ட ஆதிதிராவிடர் சாதி சான்றிதழை ரத்து செய்வதாக குடியாத்தம் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அதற்கான உத்தரவு ஆணையின் நகல் இன்று கல்பனா அவர்களின் வீட்டுக் கதவில் வருவாய் துறையினரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.  மேலும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலி சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.