தொடர் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்டறிய வேலூர் மாவட்ட காவல் துறையினர் கணினி  ப்ரோக்ராம்  ஒன்றை உருவாக்கியுள்ளனர். எம் எஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்  தொடர் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளரை அடையாளம் கண்டு அவர்களது செல்போன் எண்ணிற்கு இந்த கம்ப்யூட்டர் ப்ரோக்ராமை பயன்படுத்தி வாகனம் மேற்கொண்ட விதிமீறலின் புகைப்படத்தோடு , அபராத சீட்டையும் தானாகவே அனுப்பிவைக்க முடியும்  .


 






 


விதிமீறல்களால் சாலை விபத்துகள் அதிகரிப்பது ஒருபுறம் இருக்க , அவசரக்காலங்களில் மருத்துவ தேவைகளுக்காக , நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்வதில் தாமதம் ஏற்படுகின்றது . இதனால் ஒருசில உயிர் பலிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றது  . 




வாகன ஓட்டிகளின் இத்தகைய அலட்சிய போக்கினை குறைக்க அண்மையில்  வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ,  போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனஓட்டிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருந்தார் .




மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின் பேரில்  உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் வேலூர் மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த இரு வாரகாலமாக  பலதரப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் .


இதன்படி வேலூர் மாநகராட்சி முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை குறைக்க வெளிநாடுகளைப் போல் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விதிமீறும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்க இ-சலான் இணையமுகப்பு (போர்டல்) நடைமுறை விரைவில் அமலுக்கு கொண்டு வர , உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்  .


வேலூர் மாநகராட்சி பகுதிகளில் குறிப்பாக அண்ணா சாலை , ஆற்காடு சாலையில் வாகன நெரிசல் என்பது நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது ,  குறிப்பாக முக்கிய நகரப் பேருந்து நிறுத்தங்களில் சாலையை ஆக்கிரமித்து ஒழுங்கற்ற முறையில் நகரப் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  


இதனால் வேலூர் மாநகரட்சியின் மையப்பகுதியான  கிரீன் சர்கிளில் இருந்து வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள அடுக்கம்பாறை வரையிலான சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 30 இல் இருந்து 40 நிமிடங்கள் ஆகின்றது  .





 
இந்த பயண நேரத்தை குறைக்க மாநகர் பகுதியில் உள்ள 300 கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஒன்றிணைத்து  வடக்கு காவல் நிலையத்தில் இதற்கான ஒரு கட்டுப்பாட்டு அறைஅமைத்து,  கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி எம் எஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்  மூலம் விதிமீறல்களை கண்காணிக்க ஆல்பர்ட் ஜான் தலைமையிலான சிறப்பு குழு ஒன்று செயல்பட்டுவருகின்றது .


கட்டுப்பாடு அறை தயார் ஆனதும் முதற்கட்டமாக மாநகராட்சி  பகுதிக்குட்பட்ட கிரீன் சர்க்கிள் இருந்து தொரப்பாடி வரையிலான சுமார் 6.5  கிலோ மீட்டர் தூரத்தில் நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர  வாகனங்கள் மற்றும் தனியார் பேருந்துகளை கண்காணிப்பு கேமராகள் மூலம் வாகன உரிமையாளர்களை கண்டறிந்து , இரு முறைக்கு மேல் தொடர் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் உரிமையாளருக்கு இ-சல்லான் நேரடியாக அனுப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் .


 






போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் , இ சல்லான் போரட்டலுடன் கட்டுப்பட்டு அறையின் நெட்ஒர்க்கை  பணிகள் முழுமூச்சில் நடந்து வருகிறது ,இதன் சோதனை ஓட்டத்தில் இதுவரை 55  தொடர்ச்சியாக விதிமீறல்களில் ஈடுபட்டுள்ள வானங்களை கண்டறிந்துள்ளோம்  .  போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கண்காணிப்பு கேமராகள் கொண்டு அபராதம் வசூலிக்கும் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் , அடுத்த கட்டமாக ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள், போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் செல்பவர்கள் போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும்  கண்காணிப்பு கேமரா மூலம்  நடவடிக்கை எடுக்கப்பட்டு , போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல்களை குறைக்க முடியும் .


மேலும் வேலூர் மாநகரட்சி பகுதிகளில் சாலை பயணநேரத்தை குறைக்க , மாநகரட்சிகளில் உள்ள அனைத்து  சிக்னல்களிலும் டைமர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து பயணிகள் மற்றும் வாகனஓட்டிகள் உரியநேரத்தில் அவர்கள் சென்றடைவேண்டிய இலக்குகளை குறைந்த நேரத்தில் சென்றடையமுடியும் . மேலும் அவசர சேவைகளுக்காக   மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய  நோயாளிகளும் உரியநேரத்தில் மருத்துவமனைகளுக்கு சென்றடைய முடியும் என்று தெரிவித்தார் .