காதலித்து திருமணம் செய்துகொண்ட டாக்டர் மனைவி குடும்பத்தாருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த அரசு நிலஅளவையர், தனது வீட்டின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் . மகனின் மரணத்திற்கு பெண்வீட்டார் கொடுத்த மனஅழுத்தம் தான் காரணம் என்று சர்வேயரின் தாய் அளித்த புகாரை தொடர்ந்து , இறந்த சர்வேயரின் மனைவி உட்பட அவரது குடும்பத்தார் 5 நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரனின் மகன் திலீபன் (33) இவர் திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் அரசு சர்வேயராக பணியாற்றி வருகிறார் .
திலீபனும் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் மகள் திவ்யா (27) என்பவரும் கடந்த 2 வருடங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர் . இதில் திவ்யா எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ள திவ்யா புள்ளானேரி பகுதியில் இயங்கி வரும் அம்மா மினி கிளினிக்கில் தற்காலிக மருத்துவராக பணியாற்றி வருகின்றார் .
இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டுள்ளனர் . இந்நிலையில் ஆடிமாதம் சனிக்கிழமை பிறப்பதை ஒட்டி , 3 நாட்களுக்கு முன்னதாகவே வீட்டிற்கு அழைத்துக் கொள்வதற்காக திவ்யாவின் குடும்பத்தார் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்றே , திலீபன் வீட்டில் இருந்த திவ்யாவை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர் .
திலீபனை பிரிந்து தாய்வீட்டில் இருக்க முடியவில்லை என்று திவ்யா தொலைபேசியில் தெரிவிக்கவே , திவ்யாவை அவரது தாய்வீட்டில் இருந்து அழைத்துவர திலீபனின் குடும்பத்தார் கடந்த ஞாயிற்றுக்கிழமை திவ்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர் .
இதற்கு திவ்யாவின் குடும்பத்தார் மறுப்பு தெரிவித்துள்ளனர் , தனது மகளுக்கு திருமணமாகி இதுதான் முதல் ஆடி என்பதால் ஆடிமாதம் முடியாமல் மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் .
இதனை தொடர்ந்து இரு வீட்டாருக்கும் தகராறு வெடித்துள்ளது . இதில் திவ்யாவின் குடும்பத்தார் சர்வேயர் திலீபன் மற்றும் அவரது தாய் தமிழ்தேவியை தாக்க முயன்றுள்ளனர் . இதில் மிகுந்த மனவேதனை அடைந்த திலீபன் விரக்தியுடன் இருந்துள்ளார் . நேற்று மாலை திலீபன் அவரது வீட்டின் மேல்மாடியில் உள்ள அறையில் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் .
நீண்ட நேரமாகியும் திலீபன் கீழ் தளத்திற்கு வராததால் அவரது குடும்பத்தார் அவரை தேடி மேல்தளத்திற்கு சென்றுள்ளனர் . அங்கு திலீபனின் சடலம் தூக்கில் தொங்கிக் கொண்டு இருப்பதை கண்ட திலீபனின் குடும்பத்தார் கதறி அழுத்துள்ளனர் .
அவர்களது கதறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் . தகவலின்பேரில் விரைந்து வந்த ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் , திலீபனின் பிரேதத்தை மீட்டு , பிரேத பரிசோதைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .
மேலும் இன்று காலை திலீபனின் தாயார் தமிழ்தேவி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து , போலீசார் திவ்யா , திவ்யாவின் தந்தை தமிழ்செல்வன் , திவ்யாவின் சகோதரர் , தாய்மாமா மற்றும் சித்தப்பா உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .
காதல் திருமணம் செய்து 7 மாதத்திற்குள் சர்வேயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாமலேரிமுத்தூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .