வேலூர் மாவட்டம் அருகே உள்ள அணைக்கட்டு தாலுகா, அல்லேரி மலைகிராமத்திற்க்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான விஜி. இவருக்கு பிரியா என்ற மனைவியும், தனுஷ்யா என்ற ஒன்றரை வயது பெண்குழந்தையும் இருந்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு வீட்டின் முன் பகுதியில் தனுஷ்யா படுத்து தூங்கிகொண்டு இருந்த போது காட்டுப்பகுதியில் இருந்து நல்லப் பாம்பு ஒன்று ஊர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது.
அங்கு படுத்து உறங்கி கொண்டு இருந்த குழந்தையை பாம்பு கடித்து உள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு எழுந்து பார்த்த பெற்றோர் அவரை பாம்பு கடித்ததை பார்த்துள்ளனர். உடனடியாக மருத்துவம் பார்க்க மலை கிராமத்தில் வசதி இல்லாததால் அணைக்கட்டு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளது.
மேலும் தகவலறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைக்குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து பிரேதபரிசோதனை முடிந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்து செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் குழந்தையின் உடலை பாதி வழியிலேயை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இதனையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் குழந்தையின் சடலத்தை எடுத்து சென்றனர். மேலும் அதற்கு மேல் செல்ல சரியான பாதை இல்லாததால் குழந்தையின் பெற்றோர் உறவினர் கால்நடையாக சுமார் 10கி.மீ தூரம் மலைப்பகுதிக்கு கையால் தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய சென்றபோது, பாதி வழியில் கரடு முரடான சாலைகளில் மாவட்ட ஆட்சியரின் கார் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் மேற்கொண்டு காரில் செல்ல முடியாமல் காரில் இருந்து இறங்கினார் மாவட்ட ஆட்சியர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் காரைமிட்டு மேலே கொண்டு சென்ற பின்பு மீண்டும் காரில் பயணத்தை தொடர்ந்தார். மேலும் மலைப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் புல்லட் வண்டியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவருடன் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்து அவர்களிடம் ரூ. 25 ஆயிரம் காசோலையை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ”சாலை அமைப்பதற்க்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. விரைவாக அமைக்கப்படும். மேலும் மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும்” என உறுதியளித்தார். இதையடுத்து வனத்துறை, கிராம ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து தார் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சாலை அளவிடும் பணிகள் தொடங்கப்பட்டது.