+2 வகுப்பு மற்றும் கல்லூரி படிப்பை முடித்த மாணவ மாணவிகளுக்கு அடுத்து என்ன படிப்பது? என்ன செய்வது? என்பது குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு தனியார் நிறுவனம் மூலம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கி திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கல்லூரி மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.


இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகை தந்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் சன்னதிக்குச் சென்ற ஆளுநர் சிறப்பு தரிசனம் செய்தார். உண்ணாமுலை அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரசாதம் வழங்கினர்.




 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்;


 ”இன்றைய தினம் 800 நபர்கள் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தாம் வாழ்த்து தெரிவிப்பதாகவும், திருவள்ளுவர் நல்லாட்சியை எடுத்துக் கூறியது போல நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் செங்கோல் நிறுவப்பட்டது என்பது எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத ஒரு பெருமை தமிழ்நாடு மாநிலத்திற்கு கிடைத்துள்ளதாகவும், பாராளுமன்ற கட்டிடம் இருக்கும் வரை செங்கோல் அங்கு இருக்கும் என்றும் தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படக்கூடிய விஷயம்” என்று தெரிவித்தார். 


தொடர்ந்து, “செங்கோல் குறித்து தமிழ்நாடு முதல்வர் அரசியல் செய்யாமல் தமிழின் மீது அக்கறை இருந்தால் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கலாம். எவ்வளவுதான் கொள்கை மாறுபாடு இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழுக்கு என்று ஒரு பெருமை வரும் பொழுது அதை அங்கீகரிக்காமல் தமிழ் பற்றினை அரசியல் சார்ந்ததுதான். நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி அவர்கள் திறக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் கருத்து என்றும், பிரதமர் கட்டடத்தை திறக்கிறார் என்பது தெரிந்து வெறும் அழைப்பை ஜனாதிபதிக்கு கொடுக்க மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துக்களுடன் தான் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. 


 




 


குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின தலைவருக்கு வாக்களிக்காமல் இருந்தவர்கள் தற்பொழுது இந்த நாடாளுமன்ற கட்டட விவகாரத்தில் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்.பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய ஒரு விழா என்றும் கூறினார்.பிரதமர் நாடாளுமன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு பதில் அளித்த அவர், பழங்குடியின தலைவரை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க வாக்களிக்காதவர்களுக்கு போராட்டம் நடத்த எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என சாடினார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுப்பினர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை குறித்து தான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் அது தொடர்பாக தமிழக அரசியல்வாதிகளிடம் கேளுங்கள் என்றும் கூறினார். முன்னதாக ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசிய கீதத்தை முழுமையாக பாடி பின்னர் அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.