கொரோனா வைரஸ் தொற்று  சம்பந்தமான ஆய்வின்போது கோப்புகள் மற்றும் தரவுகளை சரிவர பராமரிக்காமல் இருந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக பதவி வகித்து வருபவர்  ச புவனேஸ்வரன் என்கிற அண்ணாமலை . இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக பதவி வகித்து வருகிறார் .




புவனேஸ்வரன் வாணியம்பாடி நகர கொரோனா நோய் தடுப்பு  கட்டுப்பாட்டு அறையின் சிறப்பு அதிகாரியாகவும் பதவி வகிக்கிறார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மழை வெள்ளம் பாதிப்புகள் தொடர்பான  ஆய்வினை வாணியம்பாடி  உதயேந்திரம் ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு  மேற்கொண்டார் .  பின்னர் , ஜலகம்பாறை  நீர்வீழ்ச்சியை சுற்றுலா மைய்யமாக மாற்றுவது உள்ளிட்ட ஆய்வுகளை நடத்திய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, கொரோனா நோய் தொற்று தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார் . 




நகராட்சி அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, நகராட்சி ஆணையாளர்  புவனேஸ்வரன் , நேற்று  விடுமுறையில் இருந்தது தெரியவந்தது . மேலும் கொரோனா கட்டுப்பட்டு அறையில் உள்ள கொரோனா நோய்த் தொற்று சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் இதர நகராட்சி அலுவலகம் சம்பந்தமான தரவுகளை சரிவர  பராமரிக்காததும் தெரியவந்தது .மேலும் சில கோப்புகளில் முழுமையாக தகவலை பதிவு செய்யாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர், ஆணையாளரிடம் விசாரிக்க கேட்டபோது அவர் அங்கு இல்லை, மேலும் மாவட்ட ஆட்சியருக்கு உரிய விளக்கம் அளிக்க யாரும் இல்லாத காரணத்தினால்  நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் மீது ஓழுங்கு நடவடிக்கையாக தற்காலிக பணிநீக்கம் செய்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார் .




இந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அதிகாரிகளை தொடர்புகொண்டபொழுது , ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் பல நிர்வாக முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து , வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தின் மேலாளர் , கணக்காளர் மற்றும் உதவியாளர் என மூன்று நபர்கள் மீது 2014  ஆம் ஆண்டு வழக்கு பதிவுசெய்ய பட்டு , பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளனர் . இந்த முறைகேடுகள் சம்பந்தமாக தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும்  நிலையில் , இதுபோல் புகார்கள் இனிவரும் காலங்களில் எழக்கூடாது என்றும் , அணைத்து கோப்புகளும் சரிவர பராமரிக்கவேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்ததாக தெரிவித்தார் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஒருவர் .


இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் , வாணியம்பாடி நகராட்சி அலுவலர்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .