திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன கம்மியம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் புனிதா. இவர் திருப்பத்தூர் மாவட்ட  குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சம்பத் சின்ன கம்மியம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புனிதா, தற்போது பரோலில் வந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் வீட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குற்றச்சம்பவங்கள் ஏதும்  நடக்கின்றதா என்ற கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.




இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் ஜோலார்பேட்டையிலுள்ள பேரறிவாளன் வீட்டில் இருந்து பணி முடித்துக்கொண்டு தனது மொபட்டில்  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சின்ன கம்மியம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் மர்ம நபர் ஒருவர் பைக்கில் தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார் . 


சந்தேகத்துக்கு இடம் வகிக்கும்  வகையில் நின்றுகொண்டிருந்த அந்த அடையாளம் தெரியாத நபரை விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டர் புனிதா, அவர் நின்று கொண்டிருந்த பகுதியில் தனது மொபெட்டை நிறுத்தி , அவனிடம்  விசாரணை மேற்கொள்ளலாம் என்று அவரது மொபெட்டை சைடு ஸ்டேண்ட் போட்டுக்கொண்டிருக்கும்பொழுது, சாலையில் நின்று கொண்டிருந்த மர்மநபர் கண்ணிமைக்கும் நேரத்தில் இன்ஸ்பெக்டர் புனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு அவனது  பைக்கில் மாயமானார். சம்பவம் நடந்த சமயத்தில் இன்ஸ்பெக்டர் புனிதாவின்  மொபைல் போனில் அந்த சமயத்தில் சார்ஜ் இல்லை என்று கூறப்படுகின்றது , மேலும் இரவு நேரத்தில் அருகில் யாரும்  இல்லாத காரணத்தினால் , செய்வது அறியாமல் தவித்த புனிதா , அவரது மொபெட்டை எங்கும் நிறுத்தாமல் நேராக  சின்ன கம்மியம்பட்டு கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று அடைந்ததும்  இந்த சம்பவம் குறித்து  ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கொடுத்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் அந்த அடையாளம் தெரியாத கொள்ளையனை தேடி வருகின்றனர். 


தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள் .


குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சமயத்தில் , ஒருங்கிணைத்த வேலூர் மாவட்டத்தில், செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதை ஆகியுள்ளது. இதேபோல் சென்ற வெள்ளிக்கிழமை, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக சோளிங்கர் பஸ் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த சுஜாதா (வயது 45) மற்றும்  இவருடைய உறவினர் சிவபூஷணம் (வயது 67) ஆகிய இரு பெண்மணிகளிடம் , காரில் லிப்ட் கொடுப்பதுபோல் அவர்களை காரில் ஏற்றிய அடையாளம் தெரியாத நபர், ஓடும் காரில் வைத்தே அவர்களது 10 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு, அவர்களை ஓடும் காரில் இருந்து வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் கீழே தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றான். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் , வழக்குப் பதிவுசெய்து , இரண்டு சிறப்புபடை அமைத்து காரில் தப்பிச்சென்ற செயின் பறிப்பு கொள்ளையனை தேடி வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது .