பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் இன்று ஒரே நாளில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்டமான மெகா திட்டத்தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள செட்டிக்குளக்கரையில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் இன்று ஒரே நாளில் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை நெடுஞ்சாலைத்துறை மற்றும பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளரை சந்திது அமைச்சர் எ.வா.வேலு பேசுகையில்;
தமிழக முதலமைச்சர் அவர்களால் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தின் மூலம் 2023 - 24 ஆம் ஆண்டுகள் தமிழக மாநிலம் முழுவதும் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, கல்வித்துறை, நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, கல்வித்துறை, நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து 27 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் நடும் பணி மாவட்ட அளவில் பசுமை குழு ஒன்று செயல்படுத்தப்பட்டு இதற்காக துறைவாரியாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 345 கிராமங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று நடும் திட்டத்தினை பொதுப்பணித்துறை அமைச்சராகிய நான் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்துள்ளேன், அதனை தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் அந்தந்த பகுதியில் இன்று மரக்கன்றுகளை நட உள்ளனர் என்றார்.திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வனத்துறை மூலம் 60 ஆயிரம் மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் 2 லட்சத்து 38 ஆயிரம் மரக்கன்றுகளும், வேளாண் துறை மூலம் 50 ஆயிரம் மரக்கன்றுகளும், தோட்டக்கலைத்துறை மூலம் 2000 ஆயிரம் மார்க்கன்றுகளும் என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று ஒரே நாளில் நட உள்ளனர் என தெரிவித்தார்.