திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த உள்ள அணைப்பேட்டை என்கிற கிராமத்தில் 
 வசிக்கும் பட்டதாரி இளைஞர் சிவக்குமார் (வயது, 35) அவருடைய பெற்றோர் சின்னபையன் இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளன.  இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வெழுதி (TET) வெற்றிபெற்றுள்ளார்.


ஆனாலும் இதுவரை அவருக்கு தமிழக அரசில்  வெற்றி பெற்றதற்காக பணிவழங்கவில்லை. இவர் தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். தற்போது கொரானா பெருந்தொற்றால் தனியார் பள்ளி வேலையும் இல்லாமல் குடும்பத்தை நடத்த சாலையோரத்தில் தனது இரு குழந்தைகளுடன் வாழைப்பழம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.


இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ‛‛விவசாய குடும்பத்தில் பிறந்த நான், முதல் தலைமுறை பட்டதாரி. கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) கலந்துகொண்டு வெற்றி பெற்றேன். ஆனால், வெற்றி பெற்று 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை, எனக்கு வேலை கிடைக்கவில்லை.  என்னைபோன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் சேர்ந்து '2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் நலச்சங்கம்' என்ற பெயரில்  சங்கத்தை 2018 ஆம் ஆண்டு நிறுவினோம் , அச்சங்கத்தின் மூலமாக பல்வேறு கோரிக்கைகள், அறவழி போராட்டங்களை நடத்தினோம்.




ஆனாலும் இதுவரை எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை அதற்கான பதிலையும் கொடுக்கவில்லை . தமிழ்நாட்டில் 80,0000 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு அரசுப் பணிக்காக இதுவரை காத்திருக்கின்றனர். எங்கள் சங்கத்தில் மட்டும் சுமார் 5,000 ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த மே, மாதம் 5 ஆம் தேதி இது தொடர்பாக, எங்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தோம். 'கொரானா தொற்று குறைந்து நிலைமை சரியானதும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறி  உறுதியளித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜீன், 3 ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.




அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதிச் சான்று 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடி ஆகும், என்பதை ரத்து செய்து, இனி ஆயுள்முழுவதும் செல்லும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனாலும் இதுவரை எங்களுக்கு நிரந்தர அரசு பணி வழங்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 


தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு, எங்களைப் போன்று தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியாற்ற பணிநியமன ஆணையை விரைவில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்று அவர் வேதனையுடன் கூறினார் 


சாலையோரம் வாழைப்பழம் விற்பதனால் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை. வேறு கூலி வேலைக்கும் செல்ல வாய்ப்பற்று இப்படி சாலை ஓரத்தில் சொந்தமாக வாழைப்பழம் விற்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றார். மாணவர்களுக்கு அறிவை போதித்து நற்சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு கொண்ட ஆசிரியர் சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றுமா தமிழக அரசு?