கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து பணிமனை நேரக்காப்பாளர் அலுவலகத்தில் பேருந்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் பண்டல்கள் திருடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பேருந்து நடத்துனர், வேலை போய்விடும் என்ற அச்சத்தில் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்திற்கு 32 லட்சம் ரூபாய் இழப்பீடாக செலுத்தி இருந்தார்.  டிக்கெட் பண்டல்கள் எப்படி திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்க தனது நண்பர்கள் சிலர் கொடுத்த அறிவுரையின்படி, பணிமனையின் நேர காப்பாளர் அலுவலகத்தின் முன் முட்டை, தேங்காய் ஆகியவற்றை மந்திரித்து வைத்த சில நாட்களிலேயே காணாமல் போன டிக்கெட் பண்டல்கள் அலுவலக நுழைவாயிலில் போடப்பட்டிருந்துள்ளது. 





இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி செங்கம் போக்குவரத்து பணிமனையில் இருந்து வழித்தடம் 9ஆம் எண் பேருந்து நடத்துனர் திருவேங்கடம், அன்றைய தினம் வசூலான  கலக்‌ஷன் பணம் ரூபாய் 2,200 மற்றும் 24,700 ஆயிரம் மதிப்பிலான பேருந்து பயண சீட்டுக்கள் ஆகியவற்றை நேரக்காப்பாளர் அலுவலகத்தில் உள்ள மேஜையின் மீது வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் சிறிது நேரத்திலியே பணத்தையும், டிக்கெட் பண்டல்களையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த விவகாரம் போக்குவரத்துக்கழக நிர்வாகத்திற்கு தெரிந்தால் தனக்கு பணியிடை நீக்கமோ அல்லது அபராதமோ விதிக்கப்படும் என்பதால், டிக்கெட் மற்றும் கலக்‌ஷன் தொகை காணாமல் போனதை மறைத்து நடத்துனர் திருவேங்கடம் தனது சொந்த பணத்தை நிர்வாகத்திற்கு செலுத்தியுள்ளார். 


ஏற்கனவே இதே பணிமனையில் திருடுபோன டிக்கெட் மற்றும் கலக்‌ஷன் தொகையானது பாதிக்கப்பட்ட நடத்துனர் ஒருவருக்கு கிடைத்ததுபோல, தனக்கும் காணாமல்போன டிக்கெட்டுகள் மற்றும் கலக்‌ஷன் தொகை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தேங்காய், முட்டை ஆகியவற்றை  மந்திரித்து நடத்துநர் திருவேங்கடம் அலுவலக வாசலில்கட்டி வைத்துள்ளார்.


இதனால் பயண சீட்டு  மற்றும் பணத்தை திருடியவர்கள் பயந்துபோய் மீண்டும் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் என்று நம்பி இருந்தார். ஆனாலும், திருட்டு நடந்து 5 நாட்களுக்கு மேலாகியும் அந்த பணமும், பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பயண சீட்டு பண்டலும் இது வரை கிடைக்கவில்லையாம்



 


இதனால் பொறுமை இழந்த நடத்துனர் திருவேங்கடம், பணம், டிக்கெட் பண்டல் திருட்டு போனது குறித்தும், அதை திருடிய நபர் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என போஸ்டர் அடித்து அப்பகுதியில் ஒட்டி வருகிறார். திருடர்களை பயமுறுத்த முட்டை, தேங்காய் மந்திரித்து கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X