தமிழர்களின் உணவிலும் வாழ்வியலிலும் இரண்டற கலந்த பனை மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ’தென்னையை விதைத்தவன் குடிச்சிட்டு சாவான், பனையை விதைத்தவன் பாத்துட்டு சாவான்’ என்ற பழமொழி, ஒரு பனைமரம் வளர்ந்து பலன் கொடுக்க ஆகும் நீண்ட காலத்தை விளக்குவதாய் அமைகிறது. இனிவரும் காலங்களில் பனை மரத்தை படங்களில் மட்டுமே பார்த்துவிட்டு சாகும் நிலை எதிர்கால தலைமுறையினருக்கு உண்டானும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் பனை மரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இதனை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னமிக்கையையும் மண் நம்பிக்கையையும் கொண்டு களத்தில் இறங்கி உள்ளார் 58 வயது இளைஞரான ராஜூ. சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ராஜூ தற்போது ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்தின் கூடுதல் பொதுமேலாளர் பணியாற்றி வருகிறார். அப்பகுதியிலேயே 'மண்ணும் மரமும்' என்ற இயற்கை பாதுகாப்புக் குழுவை வழிநடத்தி வருகிறார் ராஜூ. 



 

சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பனை விதைகளை கொள்முதல் செய்து, அதனை விதைக்கும் பணிகளில் ராஜூவும் அவர் வழிநடத்தும் மண்ணும் மரமும் குழுவை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். 

 

பனை மரத்திற்கும் தமிழர்களுக்குமான உறவு குறித்து நம்மிடம் பேசத் தொடங்கிய ராஜூ, 

 

உலக அளவில் 108 நாடுகளில் பனைமரம் வளரும் தன்மையை கொண்டுள்ளது; இருந்தாலு தமிழ்நாட்டில்தான் அரசின் அதிகாரப்பூர்வ மரமாக விளங்குகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் 20 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் இருந்தன. ஆனால் செங்கல் சூளைகள், தொழிற்சாலைகள் பெருக்கத்தால் பனை மரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டது. கடந்த 4  ஆண்டுகளுக்கு முன் வெளியான புள்ளி விவரம் ஒன்றில் தமிழ்நாட்டில் வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே இருப்பதாக தரவுகள் வெளியாகின. 



 

ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து வெறும் 2  கோடிக்கும் குறைவான பனை மரங்கள் மட்டுமே தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ளது என்றார். 

 

பனை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் மனிதகுலத்திற்கு மட்டுமின்றி இந்த பிரபஞ்சத்துக்கும்  பயன் தரக்கூடியதாக இருக்கிறது. பனை மரத்தின் மட்டை தொடங்கி அதன் பழம், நுங்கு, பதநீர் ஆகிய அனைத்தும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு  இயற்கை கொடுத்த கற்பக விருட்சமாய் உள்ளது. 

 

பனை மரத்தின் சல்லி வேறானது, மழை நீரில் 40 சதவீதத்தை நிலத்தடி நீராக சேமிக்க கூடிய தன்மை கொண்டது. மேலும் ஒரு பனை மரத்தை அழிப்பதால், அது ஒரு மரத்தை மட்டும் கொன்ற  கணக்கில் வராது மாறாக அந்த  மரத்தில் கூடுகட்டக்கூடிய குருவிகள், குருவிகள் மூலம் இயற்கையாக  விவசாயிகள், விவசாயிகளால் பலன் அடையும் மக்கள் என ஒரு சங்கிலி எதிர்வினையை உருவாக்கும். பூச்சிக்கொல்லிகளைத் தேடிச் செல்ல வேண்டிய சூழ்நிலை விவசாயிகளிடம் வரக்காரணம் பனை மர அழிப்பினாலே ஏற்பட்டுள்ளது என்று கூட கூறலாம்.

 


 

இப்படியாக மனிதக் குலத்திற்கும் இயற்கைக்கும் உற்ற துணைவனாக இருக்கும் பனைமரத்தை அழிவிலிருந்து காப்பாற்றப் பல அமைப்புகளோடு சேர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து பனை விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார் ராஜூ

 

இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் பெல் நிறுவன பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், இயற்கை ஆர்வலர்கள் என சுமார் 60 தன்னார்வலர்கள் இணைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு மண்ணும் மரமும் குழுவைத் தொடங்கினோம்.



 

 

"இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில்  கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 1.78 லட்சம் பனை விதைகளையும் 5 ஆயிரம் மரக்கன்றுகளையும் நடவு செய்துள்ளோம். இந்த  ஆண்டு 2 லட்சம்  பனை  விதைகளையும் 6 ஆயிரம் மரக்கன்றுகளையும் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து, அதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இந்த மண்ணும், மரமும் குழுவின் முக்கிய நோக்கமே அடுத்த தலைமுறையினருக்குப்  பாதுகாப்பான இயற்கை சூழலை விட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் என்ற ராஜூ, 

 

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை மற்றும் ஊரக குடியிருப்பு சுற்றி மட்டுமின்றி, நரசிங்கபுரம், மணியம்பட்டு, தெங்கால், திருவலம், சேர்க்காடு, லாலாப்பேட்டை, காஞ்சனகிரி  மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏரி கரைகள், ஆற்றுப்படுகைகள், நீர்நிலைகள், பொது இடங்கள், பள்ளி வளாகங்கள், கோயில் வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஆண்டு  1.78 லட்சம் பனை விதைகளையும், 5 ஆயிரம் மரக் கன்றுகளையும் நடவு செய்துள்ளோம், 



 

அவைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மர விதைகள் முளைத்து 2 அடி உயரம் வரையும், மரக்கன்றுகள் 4 அடி வரையும் வளர்ந்துள்ளன. அதே போல் இந்த ஆண்டு 2 லட்சம் பனை விதைகளையும், 6 ஆயிரம்  மரக்கன்றுகளையும்  நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து, இதுவரை சுமார் 25 ஆயிரம் பனை விதைகள், 1,500 மரக் கன்றுகளை நடவு செய்யப்பட்டுள்ளது என்றார் ராஜூ. 

 

மண்ணும், மரமும் குழுவின் இயற்கை பாதுகாக்கும் பணி குறித்து தகவல் அறிந்த வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, கடந்த மாதம் 31 ஆம் தேதி  சனிக்கிழமை எங்கள் மண்ணும் மரமும் குழு, வேலூர் கோல்டன் ரோட்டரி கிளப், வேலூர் மாநகராட்சி கூட்டாக 5 ஆயிரம் பனை விதைகள், 40 மரக்கன்றுகளை முத்துரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே ஓட்டேரி ஏரி கரையில் நடவு செய்துள்ளனர். மேலும் பனை விதைகளையும், மரக் கன்றுகளையும் இலவசமாக வழங்கி வரும் மண்ணும் மரமும் குழுவினர்.



 

94422 08894 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பனை விதைகள், மரக்கன்றுகள் இலவசமாக பெற்று இயற்கையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட மண்ணும், மரமும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ அழைப்பு விடுத்துள்ளார்.