ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களைப் பெற்றதில்லை. மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர்கள் தடகளத்தில் மிகக்குறைந்த வித்தியாசத்தில் பதக்கங்களைத் தவற விட்டனர். இந்தியாவின் அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிந்த அதிகபட்சத் தொலைவு 87.58 மீட்டர். ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா முதல் மூன்று முயற்சிகளிலுமே தங்கப் பதக்கத்துக்கான நிலையை தக்க வைத்துக் கொண்டார். ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.
தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் மாநில அரசு சன்மானம் அறிவித்துள்ளது.
சாதனையைப் பாராட்டி 6 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் மனோகர்லால் கத்தார் அறிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து பல மாநிலங்களில் இந்தியா தங்கம் பதக்கம் வென்றதை அடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தியா தங்கம் வென்றது இதை கொண்டாடும் வகையில் வந்தவாசி காய்கறி வியாபாரி சேட்டான் என்பவர் இன்று ஒருநாள் முழுவதும் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு மொத்தமாக 1 டன் தக்காளிகளை இலவசமாக ஒரு நபருக்கு 2 கிலோ என பாக்கெட்டில் அடைத்து வழங்கிக்கொண்டு இருக்கிறார்
இது குறித்து அவரிடம் பேசுகையில் வந்தவாசியில் நாங்கள் பல தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். 50 வருடங்களாக காய்கறி வியாபாரம் செய்துவருகிறோம். இந்நிலையில் நான் 1906-இல் இருந்து ஒலிம்பிக் போட்டிக்களை பற்றி செய்தித்தாள்களிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் பார்த்து வருகிறேன். இந்திய வீரர்கள் தங்கம் வெல்லமுடியாமல் இந்தியாவிற்கு வீரர்கள் திரும்பி வரும்பொழுது எல்லாம் நான் கண்ணீர் விட்டு அழுதுள்ளேன். ஏன் என்றால் நானும் ஒரு விளையாட்டு வீரர்தான் நான் கபடி விளையாட்டில் பள்ளியில் இருந்து கல்லூரி வரையில் சிறப்பாக விளையாடி வந்துள்ளேன்.
ஆனால் என்னால் அந்த நிலையில், வீட்டு வறுமையால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. இந்த முறையாவது டோக்கியாவில் நடைபெரும், ஒலிம்பிக் போட்டியில் நம் இந்திய வீரர்கள் தங்கம் வெல்ல வேண்டும் என்று பலமுறை கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். என்னுடைய பலநாள் கனவு மட்டும் இன்றி, இந்தியாவின் வரலாறை ஒலிம்பிக்கில் , ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எரிந்து தங்கம் பதக்கம் வென்றுள்ளதை, மகிழ்ச்சியில் கொண்டாடும் விதமாக என்னுடைய கடையில் இருந்த ஒரு டன் தக்காளியை பொதுமக்களுக்கு வழங்கும்போது வீரரை பற்றியும் இந்தியாவை பற்றியும் கூறி ஒரு நபருக்கு 2 கிலோவீதம் தக்காளிகளை வழங்கி வருகிறேன் என்றார்.