திருப்பத்தூரில் பெய்த கனமழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த 8 ஏரிகள் நிரம்பி வழிந்தன. ஏரியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்பிடித்து உற்சாகம் அடைந்தனர்.

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன.

 

திருப்பத்தூர் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 49 ஏரிகள் உள்ளன. இதில் திருப்பத்தூரில் உள்ள  திருப்பத்தூர் பெரிய ஏரி, மடவாளம் ஏரி, மாடப்பள்ளி ஏரி, குறும்பேரி ஏரி, சிம்மனபுதூர் ஏரி, ஜடையனூர் ஏரி, பொம்மி குப்பம் ஏரி, ஏலகிரி ஏரி, உள்ளிட்ட எட்டு ஏரிகள் நிரம்பி வழிந்தன..

 

இந்த நிலையில், 112 ஹெக்டேர் கொள்ளளவு கொண்ட திருப்பத்தூர் பெரிய ஏரி மற்றும் மடவாளம் ஏரியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்து ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரில்  உற்சாகமாக சண்டை ஜிலேபி, ஜப்பான் உள்ளிட்ட மீன் வகைகளை பிடித்து மகிழ்ந்தனர் வருகின்றனர்.



 


முன்னதாக, புதூர்நாடு செல்லும் மலை சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக  ஃபெஞ்சல்  புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று  இரவு ஜவ்வாது மலைப்பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட புதூர்நாடு,  நெல்லிவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள மலை கிராமங்களில் காற்றுடன் பலத்த கனமழை பெய்தது.

 

இதன் காரணமாக ஆங்காங்கே புதிய நீரோடைகள் உருவாகி மலைப்பகுதியில் உள்ள  புதூர் நாடு செல்லும் மாலை சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது.

 

மேலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத மரங்கள்  மற்றும்  பாறைகளும் உருண்டோடி வந்து சாலையில் விழுந்துள்ளன. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  10-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரம், டிராக்டர்கள் மூலம் மண் சரிவு, சாலைகளில் விழுந்த பாறைகளை மற்றும் மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.