திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயன் மோகன் வயது (35). இவர் திருப்பூரில் கூலி வேலைசெய்து வருகிறார். இவருடைய மனைவி செவ்வந்தி வயது (26). இவர்களுக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருவுற்ற செவ்வந்தி தோக்கவாடி பகுதியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்துள்ளார். செவ்வந்திக்கு பிரசவ வலி ஏற்பட செங்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது செவ்வந்திக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் இங்கு பார்க்க முடியாது என்று கூறி, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறுவில் செவ்வந்தி அனுமதிக்கப்பட்டார். அன்று மதியம் 3.30 மணி அளவில் செவ்வந்திக்கு குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த பிறகும் செவ்வந்திக்கு ரத்தப்போக்கு அதிகமாக வெளியேறி காணப்பட்டுள்ளது. அப்போது உடனடியாக மருத்துவர்கள் செவ்வந்திப் பெண்ணின் உறவினர்களிடம் செவ்வந்தியின் கர்ப்பப்பை நீக்கினால் மட்டுமே ரத்த நிற்கும் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு செவ்வந்தியின் உறவினர்களும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. உடனடியாக மருத்துவர்கள் செவ்வந்திக்கு அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை நீக்கியுள்ளனர். அப்பொழுதும் செவ்வந்திக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்ததால் ரத்தம் வெளியேறியேபடியே உள்ளது. இதனால் செவ்வந்தியை மருத்துவமனையில் உள்ள ஐ சி யு (ICU) - வில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து செவ்வந்திக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் ரத்தப்போக்கு அதிகரித்ததால் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். செவ்வந்தி உயிரிழந்ததை அடுத்து அவருடைய கணவருக்கும் உறவினருக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பெண்ணின் உறவினர்களிடம் பேசுகையில், செவ்வந்திக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கும் போது அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பை எடுத்த பிறகு உயர் ரத்த அழுத்தம் அதிகம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது நாங்கள் செவ்வந்தியை மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரிக்கு மாற்றி விட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, முறையாக மருத்துவர்கள் யாரும் செவ்வந்திக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை, அலட்சியமாக அறுவை சிகிச்சை செய்ததால் செவ்வந்தி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.