தீயணைப்பு துறை துணை அலுவலர் வீட்டில் ஸ்டவ் அடுப்பு வெடிப்பு
திருவண்ணாமலை (Tiruvannamalai News) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரப்பகுதியில் உள்ள அருணகிரிசத்திரம் கண்ணப்பன் தெருவை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் சரணவன் வயது (50). இவர் ஆரணியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு துறை துணை அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஜெயலட்சுமி வயது (48) என்ற மனைவியும் விக்னேஷ் ஜெகதீஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சரவணன் அவரது மனைவி ஜெயலட்சுமி இருவரும் நேற்று மதியம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சரவணன் வீட்டில் ஆறு மாதமாக உபயோகப்படுத்தாமல் இருந்த ஸ்டவ் அடுப்பை எடுத்து அதில் மண்ணெண்ணெய் ஊற்றி வேகமாக பம்பு செய்துள்ளார். இதில் எதிர்பாராத நிலையில் ஸ்டவ் வெடித்துள்ளது. அந்த நேரத்தில் ஜெயலட்சுமி கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்துள்ளார். ஸ்டவ் வெடித்ததில் மண்ணெண்ணெய் சிதறி கேஸ் தீயில் பட்டதில் ஜெயலட்சுமியின் புடவையில் தீ நன்றாக பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. ஜெயலட்சுமி அலறியுள்ளார். ஜெயலட்சமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தீயணைப்பு துறை துணை அலுவலர் சரவணன் மனைவியை காப்பாற்ற முயன்றார்.
மனைவி உயிரிழப்பு
சரவணன் உடையிலும் தீ பிடித்து மளமளவென எரிந்துள்ளது. சமையலறை மிகவும் சிறியது என்பதால் இருவராலும் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. ஜெயலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற தீயணைப்பு துறை ஊழியர் தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சரவணனை பரிசோதனை செய்து மேல் சிகிச்சையாக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீ விபத்தில் இறந்த ஜெயலட்சுமியின் உடலை ஆரணி நகர காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரவணன் உடன் பணிபுரிந்த தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:
தீயணைப்பு நிலையத்தில் 27 ஆண்டுகளாக சரவணன் வேலையை செய்து வருகிறார். வீடு அல்லது கடையில் தீ விபத்து ஏற்படும்போது உயிரை பணயம் வைத்து சரவணன் தான் முதலில் உள்ளே சென்று விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவார். மிகவும் தைரியமானவர். அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. சரவணன் தனது பெரிய மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தங்களிடம் கூறியுள்ளார். திருமணத்துக்காக சமீபத்தில் வீட்டுக்கு பெயிண்ட் அடித்துள்ளார். சரவணன் விரைவில் குணமாகி வீடு திரும்பி மகன் திருமணத்தை பார்க்க வேண்டும் என்றனர்.
ஆரணியில் தீயணைப்பு துறையினர் வீட்டிலேயே தீ விபத்தில் பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.