சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பது குறித்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நீர்வளத்துறையின் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பது குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் அவர் கேட்டார். அப்போது விவசாயிகள் சாத்தனூர் அணையில் இருந்து இடது புறம் மற்றும் வலது புறம் உள்ள கால்வாய்கள் அனைத்தும் தூர்வார வேண்டும் என்றும் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு வரவில்லை என்றும், வழி எங்கிலும் உள்ள கால்வாய்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும், கடைமடை பகுதிக்கு வரக்கூடிய கால்வாய்களை ஒரு சில விவசாயிகள் தங்களின் சுயலாபத்திற்காக ஆக்கிரமிப்பு செய்துவைத்துள்ளனர். இதனால் அனைத்து கால்வாய்களும் தூர் வாரிய பின்னர், கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி பிறகு சாத்தனூர் அணியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் விவசாயி ஆகிய நாங்கள் எங்கள் விவசாய நிலத்திற்கு பாசன நீர் பயன்படுத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர். 





பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசியதாவது: சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 118.75 அடியாக உள்ளது. தற்போதைய கொள்ளளவு 7,264 மில்லியன் கன அடி ஆகும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மார்ச் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது குறித்து இக்கூட்டத்தின் மூலம் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. மேலும் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பெறுவதற்காக கருத்துரு அனுப்பப்பட்டு உத்தரவு பெற்ற பின்னர் சாத்தனூர் அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாயிலிருந்து விவசாய பாசனத்திற்காக 90 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதன் மூலம் திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டில் 5 ஆயிரம் ஏக்கரும்,


 




சாத்தனூர் இடதுபுறக் கால்வாய் மூலம் திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு வட்ட ஆயக்கட்டில் 17 ஆயிரத்து 641 ஏக்கரும், திருக்கோவிலூர் தாலுகா ஆயக்கட்டில் 6 ஆயிரத்து 353 ஏக்கரும், சாத்தனூர் வலதுபுறக்கால்வாயில் தண்டராம்பட்டு வட்டத்தில் ஆயக்கட்டு பரப்பில் 1,818 ஏக்கரும், சங்கராபுரம் வட்டத்தில் ஆயக்கட்டு பரப்பில் 19 ஆயிரத்து 182 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும் நீர்வரத்து, நீர் இருப்பிற்கேற்ப கூடுதலான நாட்களுக்கு தண்ணீர் திறப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இனிவரும் காலங்களில் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை போதிய அளவு நீர் இருப்பின் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் செயற்பொறியாளார் சண்முகம், வேளாண்மை இணை இயக்குநர் அரக்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.