திருவண்ணாமலை நகரில் உள்ள பேகோபுரம் 5 வது தெருவில் வசித்து வரும் விஜயா வயது (65) என்பவருடைய வீட்டில் காஞ்சனா என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல் என்பவருக்கு மனைவி இல்லை, காஞ்சனா என்பவருக்கு கணவர் இல்லை, இந்த நிலையில் இவர்கள் இருவரும் மூன்று வருடங்களாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
மேலும் வீட்டின் உரிமையாளர் விஜயாவிற்கு தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் காஞ்சனா கடந்த ஆறு மாத காலமாக வாடகை செலுத்தாமல் வசித்து வருகிறார். வாடகை செலுத்த விஜயா தொடர்ந்து வலியுறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காதல் ஜோடிகளான காஞ்சனா மற்றும் ஞானவேல் ஆகிய இருவரும் இணைந்து விஜயாவின் 100 பவுன் தங்க நகை மற்றும் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளை அடிப்பதற்காகவும் வாடகை தொல்லையில் இருந்து விடுபடுவதற்காகவும் 65 வயது மதிக்கத்தக்க விஜயா என்பவரை காஞ்சனா மற்றும் ஞானவேல் ஆகிய இருவரும் விஜயாவின் மண்டையை உடைத்து வீட்டிலேயே கொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட விஜயாவின் உடலை ஞானவேலுக்கு சொந்தமான ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு பகுதியில் உள்ள காப்புகாட்டு வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று விஜயா உடலை உட்கார வைத்து உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்திவிட்டு சென்றுள்ளனர். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் விஜயாவின் உடல் இடுப்பிற்கு கீழே முழுவதுமாக எரிந்து தீயில் கருகி உள்ளது. மீதமுள்ள பாதி உடல் மட்டும் அங்கே இருந்து உள்ளது.
இதுகுறித்து தச்சம்பட்டு வனப்பகுதியில் கொளுத்தப்பட்டு பாதி உடல் எரிந்து சாம்பலாக இருந்தை கண்ட அப்பகுதி மக்கள் தச்சம்பட்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தச்சம்பட்டு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்த பாதி உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர் திருவண்ணாமலை பே கோபுரம் 5 வது தெருவை சேர்ந்த விஜயா என்பது தெரியவந்தது.
அதன் பிறகு விஜயாவை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட விசாரணையில் விஜயாவின் வீட்டில் வாடகைக்கு இருந்த காஞ்சனா மற்றும் காஞ்சனாவுடன் தொடர்பில் இருந்த அவரது காதலரான ஞானவேல் ஆகிய இருவரும் வீட்டு வாடகை செலுத்தாமலும் விஜயாவின் பணம் மற்றும் நகையை கொள்ளை அடிக்கும் நோக்கில் இந்தக் கொலையை திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளனர் என்பதை காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காஞ்சனா மற்றும் ஞானவேல் ஆகிய இருவரையும் தச்சம்பட்டு காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்து தச்சம்பட்டு காட்டுப்பகுதிக்கு எடுத்து செல்வதற்கு பயன்படுத்திய ஞானவேல் ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். பணம் மற்றும் நகையை கொள்ளை அடிக்கும் நோக்கில் வாடகைக்கு குடியிருந்த காஞ்சனா மற்றும் அவரது கள்ளக்காதலர் ஞானவேல் சேர்ந்து வீட்டின் உரிமையாளர் விஜயா என்ற 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.