ஜவ்வாது மலை திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது.  இதில் ஜவ்வாது மலையில் 427 மலை கிராமங்கள் 36 கிராமங்களாக ஆக பிரிக்கப்பட்டுள்ளது. கலசப்பாக்கம் வட்டம், செங்கம் வட்டம் மற்றும் ஜமுனாமரத்தூர் வட்டங்களை உள்ளடக்கிய ஜமுனாமரத்தூர் 150 சதுரகிலோ மீட்டர் தூரம் பரந்து விரிந்து கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. சுமார் 280 கிராமங்களைக் கொண்ட ஜமுனாமரத்தூரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 87 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தார் சாலையும், 18 கிலோ மீட்டர் ஜல்லி சாலையும், 60 கிலோ மீட்டர் மண்சாலையும் இவர்களது பயன்பாட்டிற்காக உள்ளது. இந்த ஜவ்வாது மலை பல குக்கிராமத்திற்கு செல்ல சாலை வசதிகள் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் தான் ஜவ்வாதுமலை ஒன்றியம் ஊர்கவுண்டனூர் ஊராட்சி குட்டூர் கிராமத்த்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையில் தார்சாலை அனைத்தும் பழுதாகியும், மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் முழுவதும் பெயர்ந்து கிடந்துள்ளது.


 


 






 


இதனால் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதற்காக ரூபாய் 34 லட்சத்து 14 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதியதாக தார் சாலை போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதியதாக போடப்பட்ட தார் சாலையை மக்கள் பயன்படுத்த தொடங்கினர். அப்போது தான் தார் சாலை தரமற்று இருந்தது பொதுமக்களுக்கு தெரிய வந்தது. பின்னர் பொதுமக்கள் சாலையை சோதித்து பார்த்தனர். அப்போது தார்சாலையை கையோடு பெயர்ந்து வருவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இவர்கள் அளித்த புகாரை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. சாலையை அமைத்தவர் ஆளும்கட்சி திமுகவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதனையடுத்து சாலை கையோடு பெயர்ந்து வருவதை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.


 




தற்போது இந்த வீடியோ திருவண்ணாமலை மாவட்டத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை போடும்போது பழைய சாலையை சுரண்டி எடுத்து விட்டுதான் சாலை அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, தரம் குறைவற்ற சாலைகளினால் விபத்து ஏற்படுவதை சுட்டிக்காட்டி சரியான அளவில் சாலைகள் போட வேண்டும் எனவும் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்ட சம்பவம் ஜவ்வாதுமலை பகுதியில் நடந்துள்ளது. அதுவும் பாதை இல்லாமல் சிரமப்பட்டு வரும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண