திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு காளை விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில்  இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் காளை விடும் விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஆரணி கோட்டாட்சியரிடமும் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் மாடு பிடி வீரர்கள் மனுக்களை‌ அளித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் காளை விடும் விழாவிற்கு அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து மாடு பிடி வீரர்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதையும் மீறி இன்று ஆரணி அருகே கொளத்தூர் கிராமத்தில் 75-ஆம் ஆண்டு காளை விடும் விழா வெகுவிமரிசையாக கொண்டாடபட்டு வருகிறது.


 






 


காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் அனுமதி அளிக்கவில்லை. இருந்தபோதிலும் கொளத்தூர் கிராமத்தில் இன்று காலையில் இருந்து  தடையை மீறி காளை விடும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு  வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்துக் கொண்டு  காளை விடும்விழா தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த காளைவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் அப்பகுதியில் இருந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையிட்ட வந்தவர்களை  காளை தூக்கி வீசியது இதில் காளைபிடி வீரர்கள் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.


 




அனுமதி இன்றி நடைபெற்று வரும் காளை விடும் திருவிழாவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினாலும் காளை விடும் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஆனால் மருத்துவ சிகிச்சை அளிக்க யாரும் இல்லாத காரணத்தினால் மாடுபிடி வீரர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதன் பின்னர் சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில் அனுமதியின்றி காளை விடும் விழாவை நடத்திய விழா குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாகவும், மேலும் காயமடைந்த மாடுபிடி வீரர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.