மங்கலம் அடுத்த மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியை சூடு வைத்ததாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
4ம் வகுப்பு மாணவி:
திருவண்ணாமலையை மாவட்டம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ள பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் இந்த தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் என 2 நபர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் என்பவரின் மகள் கவுதமி வயது ( 9) 4-ம் வகுப்பு பயின்று வருகிறாள். இந்த மாணவி, பள்ளியில் உள்ள மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு வகுப்பறையில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தலைமை ஆசிரியை உஷாராணி மாணவியை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு மாணவி வந்துள்ளார். வகுப்பறைக்கு வந்த மாணவி பாடங்களை படித்து கொண்டு இருங்கள் என தலைமை ஆசிரியர் உஷாராணி தெரிவித்துள்ளார். அப்போது அந்த மாணவி பக்கத்தில் உள்ள மாணவர்களுடன் பேசிக்கொண்டும், சேட்டை செய்துள்ளாராம் மாணவி இதனைக்கண்ட தலைமை ஆசிரியர் உஷாராணி மாணவியை அழைத்து மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
முகத்தில் பட்ட நெருப்பு:
இதனையடுத்து மாணவி எத்தனை முறை கூறினாலும் சரியாக படிக்காமல் பக்கத்தில் உள்ள மாணவர்களுடன் பேசிகொண்டே இருக்கிறாய் என்று கூறி, மாணவியை அச்சுறுத்துவதற்காக அருகில் இருந்த தீப்பெட்டியை எடுத்து அதில் இருந்த தீக்குச்சியை பற்ற வைத்து மாணவியின் முகத்தின் அருகில் வைத்து பயமுறுத்தி உள்ளார் தலைமை ஆசிரியை உஷாராணி. அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென மாணவின் முகத்தில் தீக்குச்சியின் நெருப்பு பட்டுள்ளது. விளையாட்டாக செய்த காரியம் மாணவியின் கண்ணத்தில் தீக்காயமாக பட்டுள்ளது. இதனால் மாணவியின் கன்னத்தில் தீ பட்ட மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று உள்ளார்.
இதனையடுத்து மாணவியிடம் எதற்காக அழுகிறியாய் என தாய் கேட்டதற்கு மாணவி பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து உடனடியாக மாணவியின் தாய் மணிமேகலை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கேட்ட போது மாணவியின் தாயிற்கு முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மணிமேகலை கிராம பொதுமக்களுடன் மங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் உஷாராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.