தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில, மத்திய செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. அதில் தமிழக அரசு ஊழியர்களின் 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனவரி 3ஆம் தேதி முதல் 5 கட்ட போராட்டங்களை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் சண்முகராஜன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் தண்டபானி, துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பாபு வரவேற்றார். அதைத்தொடர்ந்து கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் சண்முகராஜன் தலைமை வகித்து பேசினார்.
மாநில தலைவர் கூறியதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அரசு அலுவலர் நலன் தொடர்பான கோரிக்கைகளை புறக்கணித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் பணிபுரியும் 15 லட்சம் அரசு அலுவலர், ஆசிரியர்களது பிரதான கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிப்போம் என்பதை புறந்தள்ளி அதைப்பற்றி ஒன்றரை ஆண்டுகளாக அறிவிக்காமல் இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு அலுவலர்களுக்கு எல்லா சலுகைகளும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை வார்த்தை தற்போது பொய்த்து போய் உள்ளது. நாங்களும் திராவிட இயக்கம்தான் திராவிட இயக்கத்தின் தந்தை அண்ணா சொன்ன கருத்தான எங்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதுதான், அரசு ஊழியர்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் நிதி அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம் போராட்டத்தை அறிவிக்கும் கட்டத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
அதன்படி புதிய பென்ஷன் திட்ட ரத்து செய்ய மறுப்பது, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற ஜனவரி 3-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொடர்ந்து 20-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும், நடைபெறும், ஜனவரி 25-ந்தேதி சென்னையில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டமும், இதற்கிடையில் அரசு பேச்சுவார்த்தை நடத்த காலம் கடத்தினால் பிப்ரவரி 3-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்தமும், 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் 38 மாவட்டங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள், இணைப்பு சங்க தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.