திருவண்ணாமலை 4 ஏடிஎம் கொள்ளை வழக்கில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், ”4 ஏடிஎம் கொள்ளை குறித்து ஆதாரங்கள் அனைத்தும் கிடைத்துவிட்டதாகவும் அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், குஜராத் மாநிலத்தில் வடோதரா மாவட்டத்தில் வேலூர் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலும், ஹரியானா மாநிலத்தில் நியூஜி மாவட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஹரியானா சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் அறிவியல் தடயங்களின் அடிப்படையில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் கோலார் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்துள்ளனர்.


 




இதுகுறித்து விடுதி மேலாளர்களை அழைத்து வந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் இருந்து தப்பித்துச் சென்ற 6 பேரை தனிப்படை போலீசார் குஜராத்தில் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில் ஹரியானாவிற்கு விமான மூலம் தப்பித்துச் சென்ற 2 கொள்ளையர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நிறைவு பெறவில்லை.  இந்த கொள்ளையர்கள் தான் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு விரைவில் முற்றுப்புள்ளி கிடைக்கும். 




 


இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படிப்படியாக அனைத்தும் நடைபெறும். இந்த கொள்ளை சம்பவத்தில்  10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்து விட்டது. விரைவில் கொள்ளையர்களின் பெயர் உள்ளிட்டவைகள் வெளியிடப்படும்.


 திருவண்ணாமலையில் கொள்ளை சம்பவத்தை நடத்தி விட்டு பெங்களூர் கோலார் வழியாக விமானம் மூலம் ஹரியானா தப்பித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளையர்கள் பழைய குற்றவாளிகளா புதிய குற்றவாளிகளா என்பது விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் தெரியவரும், கொள்ளையர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் கிடைத்துள்ளது. விரைவில் அனைத்தும் வெளியிடப்படும், ஹரியானா மாநிலம் மேவாட் பகுதி என்பது நெருக்கடியான பகுதி. அந்தந்த மாநில காவல் துறையினர் தமிழ்நாட்டு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.




 


கொள்ளையர்களுக்கு உள்ளூரில் எவ்வித தொடர்பும் இருப்பது போல் தகவல்கள் ஏதும் இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து விரைவில் தகவல் தெரியும் என்றார்.


 


தேசிய அளவில் தமிழ்நாட்டிற்கு பெரிய சவாலாக இருக்கும் இந்த வழக்கில் 2 கொள்ளையர்களை தவிர அனைத்து மற்றவர்களை இங்கேயே மடக்கிப்பிடித்து துரிதமாக செயல்பட்டு இருப்பதை சுட்டி காட்டியவர், மற்ற மாநில காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையிடம் விவரம் கேட்டிருப்பதை சுட்டி காட்டினார். ஏடிஎம் மையங்களில் எங்கெங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் பாதுகாப்பு வசதிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்ளை சம்பவம் நடக்க இருக்கும் மூன்று நிமிடத்திற்கு முன்பு காவல்துறையினர் ஏடிஎம் மையங்களுக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டதாகவும், காவல்துறையினர் சென்ற பிறகு இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவித்தார். ATM ல் பாதுகாப்பு மிகுந்த பலத்துடன் இருப்பதாகவும் குறைபாடுகள் எங்கிருந்தாலும் விரைவில் களையப்படும் என்றும், முன்கூட்டியே கொள்ளையர்கள் ஏடிஎம் மையங்களில் நோட்டமிட்டு இருப்பது வீடியோக்களில் பதிவு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் ஐஜி கண்ணன் தெரிவித்தார்.