திருவண்ணாமலை (Tiruvannamalai News): நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளிநாடு, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ள மலை சிவனே மலையாகா காட்சி அளிக்கிறார். பௌர்ணமி நாட்களில் மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அண்ணாமலையார் மலையில் அரியவகை மூலிகைகள் மற்றும் சிங்கவால் குரங்கு, புள்ளி மான்கள், காட்டு பன்றிகள் வாழ்ந்து வருகின்றது. மலையின் மீது ஏறும் பக்தர்கள் எடுத்து செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் மிருகங்களுக்கும் அரியவகை மூலிகைகள் அனைத்தும் மாசு படுவதால் மலையின் மீது ஏறுவதற்கு வனத்துறையினர் தடைவிதித்து இருந்தனர். அதையும் மீறி மலையின் மீது ஏறும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்ததும் அவர்களுக்கு கடுமையான தண்டனையும் விதித்தனர்.




அண்ணாமலையார் மலையின் மீது காட்டு தீ 


இந்நிலையில், அண்ணாமலையார் மலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறையினர் மலையின் உச்சியில் சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். தீயை அணைக்க முடியாத அளவிற்கு நான்கு புறமும் பரவியது, இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் மலையின் மீது ஏறி வனத்துறையினருடன் சேர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். பலமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து முற்றிலுமாக தீயை அனைத்தனர். மலையின் மீது சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைப்பது வழக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது வனத்துறை பாதுகாப்பில் திருவண்ணாமலை மலை முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதால் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா, அல்லது வெயிலின் தாக்கம் தாங்காமல் மலையில் உள்ள மஞ்சள் பில் எரிகிறதா என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.


 




 


தீ வைத்தது சமூக விரோதிகளா என வனத்துறையினர் விசாரணை 


மேலும் இந்த தீ விபத்தால் திருவண்ணாமலை மலை மீது உள்ள அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமாகியது. இது மட்டுமின்றி தீயினால் மலையில் இருந்த மான்கள், காட்டுபன்றி, முயல், மயில்கள் அனைத்தும் தீயில் சிக்கியதா என்று தெரியவில்லை. மேலும், மலையின் மீது ஏறுவதற்கு தடைவிதித்த நிலையில், மலையின் மீது சமூக விரோதிகள் தீ வைத்தார்களா? அல்லது வெயிலின் தாக்கத்தால் தீப்பற்றியதா என வனத்துறையினர் விசாரணை நடத்தியதாக நாம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு வனத்துறையினர் தெரிவித்தனர்.