திருப்பத்தூரில் கனமழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும்  நீரால் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரிமலை அடிவாரத்தில் உள்ள  ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் அங்கு பிரசித்தி பெற்ற முருகர் கோயில் உள்ளது. 

 

இந்த நிலையில் தினம்தோறும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காகவும், முருகப்பெருமானை தரிசிப்பதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அங்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிற்காக விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது . 

 

இதனால் சுற்றுலா பயணிகளும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.