திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா மோத்தக்கல் கிராமத்தில் பட்டியலின பிரிவை சேர்ந்த மக்கள் 250 மற்றும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 750 மேற்பட்ட அனைத்து பிரிவு மக்களும் வசித்து வருகின்றனர். ஏற்கனவே மோத்தக்கல் பகுதியில் இரட்டை குவளை முறை மற்றும் முடி திருத்தும் நிலையங்களில் பட்டியலின மக்களுக்கு முடித்திருத்தம் செய்ய தனியாக அமர வைத்து முடி திருத்தம் செய்தல் என பட்டியலின மக்களுக்கும் - மாற்று சமூகத்தினருக்கும் பிரச்சனைகள் நிலவி வந்தது. இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக பட்டியல் இன மக்களுக்கு மாற்று சமூகத்தை சேர்ந்த மக்களுக்கும் பல்வேறு போராட்டங்கள் அங்கு நடைபெற்று வந்துள்ளது. தற்போது பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த கிளியம்மாள்  உடல்நிலை குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய வாகனத்தில் மாற்று சமுதாய பகுதியில்  எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது  மாற்று சமூகத்தினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.


 




சுடுகாட்டிற்கு இறந்தவரின் உடல் எடுத்துச்செல்ல இரு சமூகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் 


இந்நிலையில் பட்டியலின மக்கள் உடலை சாலையில் நிறுத்தி மாற்று சமூகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது காவல்துறையினருக்கும் அவர்களுக்கும்  இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் காவல்துறையினர் உடனடியாக மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்தவுடன்  விரைந்து வந்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  பின்னர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பட்டியலின மக்களுக்கும், மாற்று சமூகத்தை சேர்ந்த மக்களையும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


 




 


கிளியம்பாள் உடலை சுடுகாட்டில் எடுத்து சென்று  நல்லடக்கம்


இந்த பேச்சுவார்த்தையில் பட்டியல் இன மக்கள் சுடுகாடு செல்ல தனி வழிப்பாதை அமைத்து அவர்கள் அந்த வழியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சென்று உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் எனவும், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு உள்ள வழிப்பாதையில் நீங்கள் சென்று உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் எனவும், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி உத்தரவிட்டார். பின்னர் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த கிளியம்பாள் உடலை அவர்களுக்கென உள்ள பாதையை பயன்படுத்தி நல்லடக்கம் செய்யவும் வருவாய் கோட்டாட்சியர் அறிவுறுத்தினார். அதன் பின்னர் கிளியம்பாள் உடலை சுடுகாட்டில் எடுத்து சென்று  நல்லடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.