வாணியம்பாடி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடு, கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே கடும்‌ வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் ரயில்வே கேட் பகுதியில் இருந்து லாலா ஏரி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள மாரியம்மன் வட்டம், பொண்ணியம்மன் வட்டம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில்  30க்கும் கடைகள் மற்றும் வீடுகளை கட்டி  ஆக்கிரப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது .

 

இதனால் அப்பகுதியில் பள்ளி, கல்லூரி பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் செல்லும் போது கடுமையான  போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, அப்பகுதி மக்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகியோருக்கு புகார் மனு அளித்திருந்தனர்.



 

இதை தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள நெடுஞ்சாலைதுறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் 3 முறை  நோட்டீஸ்  அனுப்பியுள்ளனர்.

 

நோட்டீஸ் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று  திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த வாணியம்பாடி கிராமய காவல் துறையினர், வருவாய் துறையினர் போராட்டத்தில்  ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர்.

 

அப்போது பொதுமக்களுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கடும்  வாக்குவாதம்  தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.