ஆம்பூர் அருகே புத்தாண்டையொட்டி கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினர் விபத்தில் சிக்கினர். இதில்
லாரி சக்கரத்தில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன். இவர் தனது மனைவி காவேரி மற்றும் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் புத்தாண்டையொட்டி ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது மாராப்பட்டு பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரந்தாமன் வந்து கொண்டிருந்த போது,அதே சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த லாரி சிக்னல் ஏதும் செய்யாமல், சாலையை கடக்க திரும்பியுள்ளது.
இதில் எதிர்பாராவிதமாக பரந்தாமன் லாரியின் பின்பக்கம் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்த போது, லாரியின் பின்பக்க டயரில் இருசக்கர வாகனம் சிக்கியுள்ளது.
இதில் பரந்தாமனின் இரண்டு பெண் குழந்தைகளான கார்த்திகா ஸ்ரீ (9) மற்றும் பேரரசி (6) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்,
மேலும் பரந்தாமன் மற்றும் அவரது மனைவி காவேரி அவரது குழந்தை இளவரசி படுகாயமடைந்த நிலையில், அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்த இரண்டு பெண் குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
மேலும் புத்தாண்டையொட்டி கோவிலுக்கு சென்ற போது விபத்தில் சிக்கி இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.