நாட்றம்பள்ளி அருகே பட்டியல் இன பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்து வந்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியரை கண்டித்து  பொம்மையை பாடை கட்டி தூக்கிக்கொண்டு பேரணியாக வந்த விசிகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ள நாயக்கனேரி  மக்கள் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த பொதுவெளியை சிலர் முள்வேலி  அமைத்து விட்டதாக கூறி நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமாரிடம் அப்பகுதியில் மக்கள் மனு அளித்துள்ளனர். அதேபோல் சின்ன மோட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையான அம்பேத்கர் சிலை வைப்பதற்கு மனு அளித்து நடவடிக்கை எடுக்காததையும் கண்டித்து, மேலும் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளானூர்  ஆதிதிராவிடர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு இடத்தை தனி நபரான விஜயா இளங்கோ  ஆக்கிரமிப்பு செய்துள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை  கூறப்படுகிறது.

 

இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒன்றிணைந்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமாரை கண்டித்து பொம்மை பாடையை கட்டிக்கொண்டு நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் இருந்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக செல்ல முற்பட்டனர்.



 

இதன் காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாட்றம்பள்ளி போலீசார் விசிகவினர் கொண்டு வந்த பொம்மை பாடையை அப்புறப்படுத்தினர். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 

மேலும் போலீசார் மற்றும்  வட்டாட்சியர் குமார் உங்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அனைவரும் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.