திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரிப் பேராசிரியர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருப்பத்துார் அருகிலுள்ள பெருமாபட்டு கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வில், கோயில்களுக்கு நிலக்கொடை கொடுத்ததற்கான ஆவணமாக அறியப்படும் கல்வெட்டினை கண்டறிந்தனர். 


இதுகுறித்து முனைவர் பிரபு கூறுகையில், "பெருமாப்பட்டு ஏரிக்கரையில் கள ஆய்வினை மேற்கொண்டோம். பெருமாப்பட்டு கிராமத்தில் சந்தப்பன் ஏரியின் மேற்கு பகுதியின் கரையோரம் குபேந்திரன் என்பவருக்கு சொந்தமான தனியார் விவசாய நிலத்தில் கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தோம். இக்கல்வெட்டானது 3 அடி உயரமும் 1½ அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லால் ஆனதாகும். கல்வெட்டின் மேற்பகுதியில் திருச்சக்கரம் கோட்டுருவமாக செதுக்கப்பட்டுள்ளன.


இது வைணவ அடையாளம் அதாவது பெருமாளின் கையில் உள்ள சக்கரத்தினை குறிப்பதாகும். பொதுவாக பழங்கால தமிழகத்தை ஆட்சிபுரிந்த மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் தங்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்குவது மரபு. அவ்வாறு வழங்கும் கொடைகளுக்கு சான்றாக கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் வாயிலாக எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பர். அவ்வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பல கண்டறியப்பட்டுள்ளது.




நிலக்கொடை  தொடர்புடைய கல்வெட்டுகளை, சூலக்கல், வாமனக்கல், பள்ளிச்சந்தம் என்ற பெயர்களில் அழைக்கப்படும். திருப்பத்துார் வட்டாரத்தில் பழந்தமிழரின் வாழ்வியல் பதிவுகளை விவரிக்கும் எண்ணற்ற தடயங்கள் அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. 


அவ்வகையில் இக்கல்வெட்டானது ஒரு கோயிலுக்கு நிலக்கொடை அளித்த விபரங்களை சுருக்கமாகப் பதிவு செய்துள்ளனர்.


இதில் குறிப்பிட்டுள்ள ‘கண்டகம்’ என்பது பழந்தமிழர் கையாணட ஒரு முகத்தல் அளவையாகும். அதாவது 4 படி கொண்டது 1 வள்ளம், 40 வள்ளம் கொண்டது 1 கண்டகம் என்பது அளவை முறைகளாகும். எனவே இக்கல்வெட்டில் 40 வள்ளம் கொண்ட விதையினை விதைக்கும் அளவிற்கான நிலத்தினைக் கோயிலுக்கு கொடையாக வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு விவரிக்கின்றது. 


தோராயமாகக் கணக்கிட்டால், 40 ஏக்கர் நிலத்தினைக் கொடையாக வழங்கியிருக்கக்கூடும். திருப்பத்துார் மாவட்டத்தில் ‘விதைக் கண்டகம்’ என்ற அளவீட்டைக் குறிக்கும் முதல் கல்வெட்டு இதுவேயாகும். கல்வெட்டில் மஞ்சிப்பாடியில் எம்பெருமானுக்கு என்று குறிப்பதால் இப்பகுதியில் ‘மஞ்சிப்பாடி’ என்ற பெயர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏதேனும் ஒரு ஊருக்கு வழங்கியிருக்கக்கூடும் என்பது தெளிவாகிறது. இக்கல்வெட்டின் எழுத்தமைப்பைக் கொண்டு இது கி.பி. 14ம் நுாற்றாண்டை சேர்ந்ததென தமிழகத்தின் முதுபெரும் அறிஞர்களான ராஜகோபால் மற்றும் சேகர் உறுதிப்படுத்தினர். 



இக்கல்வெட்டு பழந்தமிழரின் அளவை முறைகளை அறிந்துகொள்ளவும் இவ்வட்டார வரலாற்றுப் பின்புலத்தினைப் எடுத்துரைக்கும் சிறப்புக்குரிய ஆவணமாகும். இது போன்ற வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்" என்றார்.