திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் வயது (50). இவர் ஊராட்சி பகுதிகளில் அரசு கட்டிட பணிகள் சம்பந்தமாக ஒப்பந்த டெண்டர் எடுத்து பணி செய்யும் ஒப்பந்ததாராக உள்ளார். மேலும் அமிர்தி பகுதியில் கேன்டீன் எடுத்து நடத்தி வருகிறார். கண்ணமங்கலம் பகுதியில் அரசு ஒப்பந்தம் ரூ.20 லட்சத்தில் எடுத்துள்ளார். இதற்கு அரசு சொத்து மதிப்பு சான்று கோரி ஆரணி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அரசு சொத்து மதிப்பு சான்று வழங்கப்படும். இந்த சான்று வழங்குவதற்காக துணை தாசில்தாருக்கு 10 ஆயிரமும், வருவாய் ஆய்வாளருக்கு 10 ஆயிரமும், கிராம நிர்வாக அலுவலருக்கு 5 ஆயிரத்தையும்  சீனிவாசன் லஞ்சமாக கொடுத்துள்ளார். இந்த லஞ்சத்தை பெற்றுக் கொண்டவர்கள் சான்றுக்கு பரிந்துரை செய்து, தாசில்தாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட தாசில்தார் 


அதனைத்தொடர்ந்து சீனிவாசன் கடந்த வாரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார். அதற்கு  தாசில்தார் மஞ்சுளா 20 லட்சத்திற்கு 20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பணம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என்று தாசில்தார் கறாராக தெரிவித்துள்ளார். அதோடு தாசில்தார் மஞ்சுளா இரவு காவலர் பாபு என்பவரை சீனிவாசனிடம் அனுப்பி பேரம் பேசியுள்ளார். அப்போது ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் சான்று வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட சீனிவாசன் பணத்தை தயார் செய்துவிட்டு வருவதாக கூறி அங்கு இருந்து சென்றுள்ளார். ஆனால் பணம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புதுறை காவல்துறைக்கு  தகவல் தெரிவித்துள்ளார்.


லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது 


தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்  ரூ.10 ஆயிரத்தை  சீனிவாசனிடம் கொடுத்து அனுப்பிவைத்துள்ளனர்.  சீனிவாசனிடம் இருந்து 10 ஆயிரம் பணத்தை தாசில்தார் மஞ்சுளா பெற்றுக்கொண்டு உடனடியாக இரவு காவலர் பாபுவிடம் கொடுக்க முயன்றார். அப்போது அங்கு மறைந்திருந்த திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துணை காவல்கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர்  மைதிலி ஆகியோர் தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மறைந்து இருந்து  தாசில்தாரையும் காவலாளியையும் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சான்றிதழ் வழங்குவதற்கு மஞ்சுளா இரவு காவலர் பாபு மூலம் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதனையடுத்து தாசில்தார் மஞ்சுளா, இரவு காவலர் பாபு ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பணம் வாங்கிய துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓவிடமும் இரவு முதல் தற்போது வரையில் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.