சென்னையிலிருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த ஐடி ஊழியர்களின் கார் விபத்தில் சிக்கியதில் லேசான காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பினார்கள்.

 

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலாக்கு வந்தனர். இந்நிலையில் இன்று மதிய உணவு முடிந்த பின்பு கெவின் வயது 23 என்ற நபர் படகு இல்லத்திற்கு செல்ல காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்து ஒன்பது பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும் ஏலகிரி மலையில் உள்ள ஆரம்ப சுகாதார  நிலையத்தில் சிகிச்சை பெற்று மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.



 

முன்னதாக, வாணியம்பாடியில் வளைவில் திரும்பிய இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.





 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் மிட்டூர் வரை செல்லும் தனியார் பேருந்து நேதாஜி நகர் பகுதியில்  சென்ற போது அங்குள்ள வளைவில் இருசக்கர வாகனத்தில் திரும்பிய அதே பகுதியை சேர்ந்த  ஷாநவாஸ் என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஷானாவாஸ் கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

 

சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இளைஞரை  மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்துக்கு  காரணமான பேருந்து ஓட்டுனர் பள்ளவல்லி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து பேருந்து பறிமுதல் செய்யபட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.