திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அடுத்த பேராயம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி பச்சையப்பன் (60), இவரது மனைவி விக்டோரியம்மாள் (55). இவர்களுக்கு 2 மகன்கள். 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பச்சையப்பனுக்கு அதே கிராமத்தில் சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர் இரவில் வீட்டில் உணவு அருந்திய பிறகு தனது நிலத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவார். இதேபோல், இரவு நிலத்திற்கு சென்ற பச்சையப்பன்  காலையில் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி விக்டோரியம்மாள் நிலத்திற்கு சென்று பார்த்துள்ளார்.



அதனை தொடர்ந்து, நிலத்தில் இருந்த கட்டிலில் பச்சையப்பனின் மார்பு மற்றும் கழுத்து பகுதியில் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் ரத்த காயத்துடன் பச்சையப்பன் மயங்கிய நிலையில் கடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பச்சையப்பன் மனைவி கதறி அழுது உள்ளார். இந்த சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தில் உள்ள நிலத்துக்காரர்கள் உடனடியாக வாணாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், கிராமிய துணைகாவல் கண்காணப்பாளர் அண்ணாதுரை, வாணாபுரம் ஆய்வாளர்  தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனால் அவரை யாரோ நபர்கள், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.


இதையடுத்து அங்குள்ளவர்கள் பச்சையப்பனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 



 


இது குறித்து துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரையிடம் பேசுகையில் 


பச்சையப்பன் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் கொடுத்த தகவலின்பேரில் பேரயாம்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பழகன் (50), அவரது மனைவி ஜெயந்தி (40), அன்பழகனின் நண்பர் சுப்பிரமணி (54) ஆகிய 3 பேர் மீது சந்தேகமாக உள்ளது எங்களுக்கும் பக்கத்து நிலத்துரான பூமிநாதனுடன் நிலதகராறு உள்ளது எனவும் கூறியுள்ளார். இதன்  அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினோம். 


விசாரணையில் பச்சையப்பனின் நிலத்திற்கு பக்கத்து நிலத்துக்கார் பூமிநாதன் என்பவர், தனது ஒரு ஏக்கர் நிலத்தை கடந்த 2014ஆம் ஆண்டு பச்சையப்பனுக்கு விற்றுள்ளார். ஆனால், பூமிநாதனின் அண்ணன் அன்பழகன் என்பவருக்கு இதில் உடன்பாடு இல்லையாம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அன்பழகன் அவரது மனைவி ஜெயந்தி, சுப்பிரமணி ஆகிய 3 பேரும் நிலத்துக்கு சென்றுள்ளனர். அங்கு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பச்சையப்பனை எழுப்பி, நாட்டுத் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.



பின்னர், அந்த துப்பாக்கியை அருகில் உள்ள குட்டையில் வீசி விட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக பச்சையப்பனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி செய்தோம் எனக்கூறியுள்ளனர் விசாரணையில், வாணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து அன்பழகன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து. பின்னர், அவர்களை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து குட்டையில் வீசிய துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.