திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து சிப்காட் அமைப்பதற்கான தகுந்த இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், சிப்காட் அமையவிருக்கும் இடம் குறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்போ, ஆணையோ வெளியாகவில்லை.


இதற்கிடையே, பாலியப்பட்டு கிராமத்தை மையப்படுத்தி சிப்காட் அமையவிருப்பதாக வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடிவருகின்றனர். 


 


 




 



இந்நிலையில் பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைகிறதா இல்லையா என்பன குறித்த பல கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்க மக்கள் முடிவு செய்தனர். அதனையடுத்து மனு கொடுக்க இன்று காலை 500க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை புரிந்தனர் .


இதனை அறிந்த காவல் துறையினர் மனு கொடுக்க வந்தவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலிலேயே தடுத்து நிறுத்தினர். மேலும், கூட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்லக்கூடாது. அதனால்  20 பேர் கொண்ட குழுவாக சென்று மனு கொடுங்கள் என காவல் துறையினர் கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். 


 




 


 


அதனையடுத்து காவல் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பொதுமக்களை வரிசையாக நிறுத்தினர். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ், மாவட்ட ஆட்சியர் தற்போது ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளார். எனவே மனுவை தன்னிடமே கொடுக்க சொல்லி மனுக்களை பெற்றுக்கொண்டார்.


 




 


அந்த மனுவில், “தமிழ்நாட்டில் உள்ள சிப்காட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (வாரிசுகள்) அரசு சார்பில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா, சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் நீர் ஆதாரம் எவ்வகையில் கிடைக்கப் பெறுகிறது. தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவன பகுதிகளில் காற்று மாசு அளவு எவ்வளவு உள்ளது” என பல கேள்விகளை கேட்டிருக்கின்றனர். 


அதேபோல் புனல்காடு கிராம மக்கள் அளித்த மனுவில்,  “தமிழ்நாட்டில் எத்தனை நகராட்சிகளில் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து நகராட்சிக்கு வெளியில் உள்ள பகுதிகளில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அப்படி அமைக்கப்பட்டிருந்தால் எந்தெந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தெந்த நகராட்சியில் தொழில்நுட்ப முறையில் குப்பைக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கிராம பகுதியில் கொட்டி கிடங்கு அமைக்க அரசாணை உள்ளதா” என கேள்விகள் கேட்டிருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண