திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புஷ்பகிரி கிராமப்பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று திருவிழா முன்னிட்டு சந்தவாசல் சர்ச் அருகே நாடகம் நடந்துள்ளது. அப்போது அம்மன் கோயில் படவேட்டை சேர்ந்த ஓம்பிரகாஷ் (24) என்பவர் பைக்கில் சந்தவாசல் வழியாக படவேட்டிற்கு சென்றுள்ளார். இவரது பின்னால் இருவர் அமர்ந்து சென்றனர். திடீரென நாடகம் பார்க்க சாலையில் அமர்ந்திருந்தவர்களுக்கும் பைக்கில் வந்த ஓம்பிரகாஷிற்கும் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது . பின்னர் இதுகுறித்து சந்தவாசல் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு 11 மணிக்கு சந்தவாசலில் இருந்து படவேட்டிற்கு புஷ்பகிரியைச் சேர்ந்த சுபாஷ் (எ) யுவராஜ் ஆட்டோவில் சவாரி ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்தபடி ஓம்பிரகாஷ் (24) நண்பர் சிவபிரசாத் (21) ஆகியோர் உடன் இருந்தனர். சுபாஷ் சவாரி இறக்கி விட்டு திரும்பும் போது, ஆட்டோவைப் பார்த்த ஓம்பிரகாஷ், தன்னை அடித்த புஷ்பகிரியின் ஆட்களில் ஒருவன் தான் இந்த ஆட்டோ டிரைவர் என நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். சந்தவாசலில் எனது நண்பனை அடித்த நீ எப்படி படவேட்டிற்கு வரலாம் என சிவபிரசாதை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சற்று பயந்து போன சுபாஷ் ஆட்டோவை எடுத்துக் கொண்டு ரேணுகொண்டாபுரம் வழியாக சென்றுள்ளார். நண்பர்கள் இருவரும் துரத்திப்பிடிக்க ,பைக்கை சிவபிரசாத் ஓட்டியுள்ளார், ஓம்பிரகாஷ் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். உயிருக்கு பயந்த சுபாஷ் ஆட்டோவை வேகமாக ஓட்டியுள்ளார், பைக்கில் ஓவர் டேக் செய்தபடி வேகமாக சென்றனர். திருவேங்கடபுரம் கொல்லைமைடு அருகே பைக்கை ஓவர் டேக் செய்தபோது ஆட்டோ இடித்து, பைக்குடன் அருகே உள்ள பள்ளத்தில் இருவரும் விழுந்து காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஓம்பிரகாஷ், சிவபிரசாத் ஆகிய இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். வழியில் சிவபிரசாத் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓம்பிரகாஷ் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .
ஓம்பிரகாஷும் சுபாஷும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சமூக மோதல் ஏற்படாமல் இருக்க படவேடு, சந்தவாசல் பகுதியில் ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன், மற்றும் போளூர் டிஎஸ்பி அறிவழகன், பலத்த பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். போலீஸ் பாதுகாப்புடன் சிவபிரசாத் உடல் எரியூட்டப்பட்டது. இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்