திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மழுவம்பட்டு கிராமத்தில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறும் முகாமை தொடங்கி வைக்க பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வந்தார். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கிராமத்திற்கு தினந்தோறும் வழங்கப்படக்கூடிய குடிநீர் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மழுவம்பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினந்தோறும் ஊராட்சி மூலம் வழங்கப்படக்கூடிய குடிநீர் வாணாபுரம் கிராமத்தை ஒட்டி உள்ள பெரிய ஏரி கரையோரம் அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் மேல்நீர் தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு வருகிறது.




 


அதன் பிறகு, மேல்நீர் தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குழாய்க்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வாணாபுரம் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் மூலம் ஏரியில் கலப்பதாலும், கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவற்றுடன் குப்பைகளையும் சேர்த்து ஏரியில் கொட்டப்படுகிறது. பின்னர் ஏரியில் உள்ள தண்ணீர் மாசு ஏற்பட்டு ஏரிக்கரையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றில் நீர் உறிஞ்சப்பட்டு மின் மோட்டார் மூலம் மேல்நீர் தேக்கத் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய குடிநீர் பச்சை நிறமாகவும், கருப்பு நிறமாகவும் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சுகாதாரம் அற்ற தண்ணீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தினந்தோறும் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கக்கூடிய அவல நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


 




 


மேலும் குழாய் வரி, வீட்டு வரி உள்ளிட்டவற்றை மட்டும் முறையாக வசூல் செய்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு வழங்கக்கூடிய குடிநீர் முறையாக சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினர். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு சேகரிக்க வருகிறீர்கள் ஆனால் ஏழை எளிய மக்களான நாங்கள் குடிக்க சுகாதாரமான குடிநீர் மட்டும் தான் உங்களிடம் கேட்கிறோம் அது ஏன் முறையாக வழங்க மறுக்கிறீர்கள் என்று சாராமாரியாக கேள்வி எழுப்பினர்.  பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு சராசரியாக கேள்வி எழுப்பினார். அப்போது அமைச்சர் பொதுமக்களிடம் உங்களுக்கு புதியதாக மேல்நீர் தேக்க தொட்டி கட்டவுள்ளதாகவும், புதியதாக போர் போட்டும், புதியதாக வேறு ஒரு இடத்தில் புதிய கிணற் வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.