திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அடிவாரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 106 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு நான்கு நிரந்தர ஆசிரியர்களும் இரண்டு தற்காலிக ஆசிரியர்களும் பாடம் நடத்தி வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பணியிடம் இந்த பள்ளியில் காலியாக உள்ளது. இந்நிலையில் அந்த பள்ளியில் பணி செய்யும் பக்கத்து கிராமமான வீரனந்தல் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்ற ஆசிரியர் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்று பள்ளி நிர்வாகத்தை கண்காணித்து வந்துள்ளார்.
மேலும், ஏழுமலை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் என்பதால் வேலைக்கு சரிவர வருவதில்லை அதே நேரத்தில் பள்ளிக்கு வரும் பொழுது குடிபோதையில் வந்து மாணவர்களை ஒருமையில் பேசி திட்டியதாக மாணவர்கள் கடந்த சில மாதங்களாக தங்களின் பெற்றோர்களிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் சிலர் பள்ளிக்குச் சென்று ஏழுமலை குறித்து புகார்களை சக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பொறுப்பு தலைமை ஆசிரியரை பணி மாறுதல் செய்ய வேண்டும் என புதுப்பாளையம் வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். புகார் மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படடது .
பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பேரானந்தல் பகுதிகளில் மக்கள் ஒன்று திரண்டு போதை ஆசிரியர் ஏழுமலையை மாற்றும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை எனக்கூறி பள்ளியை புறக்கணித்தனர். தகவல் அறிந்த புதுப்பாளையம் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் ஒரு வாரத்துக்குள் ஏழுமலையை பணிமாற்றம் செய்வதாக சமராச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் 2 மணி நேரத்திற்கு மேல் மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்குச் சென்றனர். இதனால் பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தகவல் அறிந்து திருவண்ணாமலை மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் அடிவாரம் பள்ளிக்கு வருகை தந்து நடந்த சம்பவங்களை கேட்டு அறிந்த உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.”உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்