திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி செல்லக்குட்டி வயது (35) என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் செல்லகுட்டி இன்று கூலி வேலைக்கு எங்கும் செல்லாததால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சோமாசிப்பாடி ஏரியில் மீன் பிடிப்பதற்காக பச்சையப்பன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட்டை ஏரிக்கு எடுத்து சென்றார். பம்பு செட்டிற்கு 200 மீட்டர் தூரத்திற்கு வயர் எடுத்துச் சென்று ஏரியில் உள்ள தண்ணீரில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் செல்லகுட்டி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
அதனைத் தொடர்ந்து உடனடியாக பச்சையப்பன் நிலத்தில் விவசாயம் மேற்கொண்டிருந்த சிலர் செல்லக்குட்டியின் உடலை அங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எடுத்து சென்று பார்த்தனர். அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக விவசாய நிலத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மின் ஒயர்கள், மின் மோட்டார்களை அங்கிருந்து எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி செல்லக்குட்டி மின்சாரம் தாக்கி இறந்ததை காவல்துறையினருக்கும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் மறைப்பதற்காக விவசாயி பச்சையப்பன் என்பவரிடம் பல லட்சம் கையூட்டு பெற்றுக் கொண்டு செல்லக்குட்டியின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சோமாசிப்பாடி ஏரியில் விவசாய நிலத்திலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து மீன்பிடிக்கும் சம்பவத்தை பொதுப்பணித்துறை அலுவலர்களும், சோமாசிப்பாடி கிராம நிர்வாக அலுவலரும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்ததால் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கூலித் தொழிலாளி மீன் பிடிக்கும் போது மின்சாரம் தாக்கி பலியான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்யாமல் விவசாயி பச்சையப்பனிடம் கையூட்டு பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இறப்பிற்கு என்ன காரணம் என்று கூட ஆராயாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.