திருவண்ணாமலை (Tiruvannamalai News): கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதற்காக சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பாக சுமார் 18000 ஏக்கர் விளை நிலங்களில் நிலக்கரி எடுப்பதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது. நெய்வேலியில் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்கான பணியை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 16 ஆண்டு காலமாகியும் என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை நிலக்கரி எடுக்க பயன்படுத்தாமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளது. அங்கு பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத இயந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் நடக்கிறது.


 




தற்போது அங்கு நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் சார்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக விவசாயிகள் ஆடு, மாடுகள் போல் தழைகளை உண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் நூதனமுறையில் தெரிவிக்கையில், புவி வெப்பமயமாதல் காரணமாக மாற்று எரிசக்தி மின் உற்பத்தியில் காற்றாலை, சூரிய மின்சக்தி, நீர்மின் சக்தி, பையோ கழிவு ஆற்றல் மின் சக்தி, கடல் அலை விசை மூலம் மின்சக்தி உள்ளிட்ட பல வகையில் தற்போது மின்சாரம் தயாரிக்க தீவிர முயற்சியில் உள்ளது.


 


 




 


இந்நிலையில் அனல் மின்சக்தி மூலம் சுமார் இரண்டு சதவீதம் அளவுக்கு மட்டுமே மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக மனிதனின் உணவு தேவைக்கு அடிப்படையாக விளங்கும் விவசாய விளை நிலங்களை அழித்து மின் உற்பத்தி மேற்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகளை என்எல்சி நிர்வாகம் கைவிடவேண்டும். இந்த நிலை நீடித்தால் மனிதன் ஆடு, மாடுகளைப் போல இலைகளை உண்ணும் நிலை ஏற்படும் என்பதை விளக்கும் விதமாகவும், அரசின் சார்பில் ஒரு நிலம் கொடுக்கப்பட்டால் 5 வருடங்களுக்குள் அந்த நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது பயன்பாட்டில் உள்ள நிலையில் 2006 ஆம் ஆண்டு நிலம் எடுக்கப்பட்டு இதுவரை 16 ஆண்டுகள் பயன்பாடுத்தப்படாமல் உள்ள நிலங்களை நில உரிமையாளர்களிடமே என்எல்சி நிர்வாகம் திரும்பி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.