நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீடு, கோயில், பொது இடங்களில் கிருஷ்ணன், ராதை கிருஷ்ணன், குழந்தை கிருஷ்ணன், புல்லாங்குழல் கிருஷ்ணன். கோமாதா கிருஷ்ணன் என்று எண்ணற்ற வடிவங்களில் கிருஷ்ணன் சிலைகளை வைத்து கொழுக்கட்டை, வெண்ணெய், மற்றும் லட்டு, ஜிலேபி என பல்வேறு வகையான பலகாரங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்வது பக்தர்களின் வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டு நாளை கிருஷ்ணஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் கிருஷ்ணன் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை அபாயம் மண்டபம் சாலையோரம், வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கான கிருஷ்ணன் சிலைகளை தயாரித்து அதற்கு வர்ணம் பூசி வருகின்றனர் தந்தையும் மகளும். இங்கு அரை அடியில் இருந்து மூன்று அடி உயரமுள்ள கிருஷ்ணன் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது . இந்த சிலைகளை வெயிலில் உலர்த்தி விற்பனைக்கு வைத்து வருகிறார்கள்.
இது குறித்து கிருஷ்ணன் சிலை தயாரிப்பாளர்கள் கூறியதாவது, “திருவண்ணாமலையில் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வடமாநிலத்தை சேர்ந்தவர் கூழ் சுவாமி சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி அரை அடி முதல் 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலை தயாரிப்போம். இதைதவிர கிருஷ்ணன், அம்மன், முருகன், சிவன், திருப்பதி உள்ளிட்ட எண்ணற்ற சுவாமி சிலைகளும், இதை தவிர வீடுகளில் மாட்டப்படும் திருஷ்டிபொம்மைகள், வீட்டில் வைக்கப்படும் அலங்கார பொம்மைகள் என்று பல வகையான பொம்மைகள் தயாரித்து வருகிறோம்.
இங்கு தயாரிக்கும் சிலைகள் திருவண்ணாமலை நகர்பகுதியில் வைத்தும், விற்பனைக்காக எங்களிடம் பல பகுதியில் வாங்கியும் செல்கின்றனர் . நடப்பாண்டு நாளை (30.08.2021) கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த ஒரு மாதமாக கிருஷ்ணன் சிலைகளை பல வடிவங்களில் செய்து வருகிறோம். இவ்வாறு செய்யப்பட்ட கிருஷ்ணன் சிலைக்கு சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பல வண்ணங்களில் பெயிண்ட் அடித்து வெயிலில் உலர்த்தி விற்பனைக்கு செய்து வருகிறோம்.
விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் திருவிழா முடிந்தவுடன் விசர்ஜனம் செய்யப்படும். ஆனால் கிருஷ்ணன் சிலை அப்படியில்லை. பூஜையில் வைக்கப்படும் கிருஷ்ணன் சிலை பூஜை முடிந்தவுடன் நாம் தினசரி பூஜை அறையில் வைத்து வழிபடலாம். ஒரு சிலை 150 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணஜெயந்திக்கு ஒரு நாள்மட்டுமே இருப்பதால் விற்பனை களைகட்டியுள்ளது.இவ்வாறு வடமாநில தயாரிப்பாளர்” கூறியுள்ளார்.