ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பு பணி அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பணிகளைத் தொடங்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் சட்டமன்ற தேர்தல் போல இருக்காது ஏனென்றால் ஒவ்வொரு கிராமத்திலும் வார்டு உறுப்பினர் தேர்ந்தெடுப்பதற்கும் பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்பதால் தேர்தலில் அதிக அளவு போட்டியாளர்கள் போட்டியிடுவார்கள் இதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் இதனை சரிசெய்து சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை முடிக்க வேண்டும் அதற்கான ஆயத்த பணிகளை அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்படுவார்கள். அதிக அளவு தேர்தல் பணியாளர்கள் தேவைப்படுவதால் வருவாய்த் துறை,வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, மீன்வளத் துறை போன்ற துறை பணியாளர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் 2220 கிராம வார்டு உறுப்பினர்களுக்கும், 288 கிராம பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும் , 127 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கும், 13 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கான நேரடி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்தல் அனேகமாக இரண்டு கட்டமாக நடத்த வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்காக மாவட்டத்தில் 1410 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்தப்படும் நான்கு விதமான வாக்குச்சீட்டுகள் இதில் பயன்படுத்தப்பட உள்ளது.
தேர்தலுக்குப் பின்னர் மறைமுகத் தேர்தல் முறையில் கிராம ஊராட்சி துணைத் தலைவர்கள், வட்டார ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், வட்டார ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வட்டார ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் கட்சி அடிப்படையிலும் கிராம ஊராட்சி வார்டு மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தல் கட்சி அடிப்படை இல்லாமலும் நடைபெறும் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் தங்களின் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களைப் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் சாய்தளம் அமைத்தல், குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும். வாய்க்குப்பெட்டிகள் இருப்பு தேவை வாக்குச்சீட்டுகள் தேவையான அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்தல் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பதிவு பொருள்களை தயாரித்தல் மற்றும் வாங்குதல் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை உறுதி செய்து அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் மேலும் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணும் பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் முறையான பயிற்சி வழங்குதல் அதற்கான கால அட்டவணை தயாரித்து கால அட்டவணையின் படி பயிற்சிகளை வழங்கிட வேண்டும்.
மாவட்டத்திலுள்ள 452 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையுடன் இணைந்து ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்களுடன், மத்திய பாதுகாப்பு படையினரும் தேர்தல் வாக்குப்பதிவு பணிகளைக் கண்காணிப்பார்கள். இந்த பணிகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும்.
காவல்துறையினர் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பினை உறுதி செய்தல் ஏற்கனவே நடந்த தேர்தல்களில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து பாதுகாப்பினை அதிகரித்தல், வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் மற்றும் ஏனைய பாதுகாப்புக்கு தேவையான பணிகளுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாதிரி நன்னடத்தை விதிகள் பின்பற்றுதல் உறுதி செய்திடத் தேவையான அளவிலான காவல்துறையினர் பணியமர்த்தப்பட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாதவாறு போதியளவு பாதுகாப்புகளை உறுதிப்படுத்தக் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்று காவல்துறையினரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைதியாகவும் நல்ல முறையில் நடைபெற ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு தேர்தல் பணியில் ஈடுபடும் மற்ற அனைத்து துறை அலுவலர்களும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கி சிறப்பாக தேர்தல் நடத்திட பணிகளை தொடங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபா சத்தியன் , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் , திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,வட்டாட்சியர்கள் கலந்துக்கொண்டனர்.