திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் ரெட்டி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் சத்யநந்தன், தலைமை காவலர்கள் மற்றும் தனிப்படை காவலர்கள், திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பகுதியான வள்ளிவாகை புதூர் கிராமத்தில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது சந்திரன் என்பவரது குடோனில், திருவண்ணாமலை சார்ந்த ஆறுமுகம், என்பவர் சுமார் 45 கிலோ எடையுள்ள 330 மூட்டை  இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். ரேஷன் கடைகளுக்கு சென்று ரேஷன் கார்டுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய ரேசன் அரிசி தனிநபர் குடோனுக்கு வந்ததது எப்படி என்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.


அதனை தொடர்ந்து தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததும் மற்றும் ரேஷன் அரிசியை TN23 AV 9993 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்ததும் தெரியவந்ததையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கிய ஆறுமுகம், குடோன் உரிமையாளர் அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சந்திரன் (40) மற்றும் லாரி டிரைவர் ராமு  (35) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 




அதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 14,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காவல்துறையினர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை செய்ததில் இருந்து கிடைத்த தகவலை அடுத்து, உடனடியாக காவல்துறையினர் ஆறுமுகத்தின் அண்ணன் ஏழுமலை (45) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 25 கிலோ எடை கொண்ட 170 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பின்பகுதியில் மேலும் ரேஷன் அரிசியை TN25 F6432 என்ற பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டிருப்பதும் தெரியவந்தது.


இதையெடுத்து ஏழுமலையை கைது செய்து அவரிடமிருந்து 4,250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு டாடா ஏஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக கைது செய்யப்பட்ட நான்கு நபர்களிடம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 19,100 கிலோ ரேஷன் அரிசி, ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி கூறியபடி காவல்துறையினர்  குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.




அரிசி, கோதுமை கூட பொது மக்களிடம் இருந்து விலைக்கு வாங்கி இருக்கலாம் என்று கூறலாம். ஆனால் ரேஷன் கடைகளுக்கு போக வேண்டிய அரிசி  தனிநபர் குடோனுக்கு சென்றது சந்தேகத்தினை  ஏற்படுத்தியுள்ளது. இது அரசு அதிகாரிகளின் துணை இல்லமால் நடந்து இருக்காது என்பதால் இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முறையாக விசாரணை நடத்தினால் பலர் பிடிபடுவார்கள்