வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி வங்ககட்டூர் கிராமத்தை சேர்ந்த நரேஷுக்கும் (30). ஆம்பூரைச் சேர்ந்த அருணாவுக்கும் (25)  திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், நரேஷ் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நரேஷின் மனைவி அருணா ஆம்பூர் அருகேயுள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று காலை 9.30 மணியளவில் ஆம்பூரிலிருந்து பேருந்து ஏறி கல்லப்பாடி வங்ககட்டூர் செல்வதற்காக  குடியாத்தம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.


தோஷம் கழிப்பதாக கூறி 10 சவரன் தாலி சங்கிலி அபேஸ்-பேண்ட், சர்ட் அணிந்த டிப்டாப் சாமியார் கைவரிசை

 

அப்போது பேருந்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அருணாவுடன் பேச்சு கொடுத்தபடி வந்துள்ளார். சிறிது தூரம் கழித்து அருணா  இருக்கைக்கு அருகில் அமர்ந்தபடி பேச்சு கொடுத்து வந்த அடையாளம் தெரியாத நபர் தன்னை ஒரு சாமியார் என்றும் உங்கள் கணவருக்கும், உங்கள் பெற்றோருக்கும் தோஷம் உள்ளது எனக் கூறி அவரை அச்சுறுத்தி இதற்கு உடனடியாக  பரிகாரம் செய்ய வேண்டும் இல்லை என்றால் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆபத்து நிகழும்  என்று கூறியுள்ளார்.


 

இதனைக் கேட்டு  மிகவும் அச்சத்திற்குள்ளான அருணா  தோஷம் போக்க என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார், அதற்கு அந்த நபர் உங்கள் கணவரின் குலதெய்வ கோயிலில் வைத்து தாலி பூஜை செய்தால் அனைத்து தோஷமும் நிவர்தியாகிவிடும் எனக் கூறி குடியாத்தம் வ.உ.சி. தெருவில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கோயில் வளாகத்தில் அருணாவை அமர செய்துவிட்டு அந்த கோயிலின் பூசாரியிடம் ஏற்கனவே அறிமுகம் ஆனவர் போல் பேச்சு  கொடுத்த அந்த அடையாளம் தெரியாத நபர் பின் அருணாவின் 10 சவரன் தாலி சங்கிலியை சாமி சன்னிதானத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி அவரிடம் இருந்து தாலியை பெற்று சாமி கருவறையில் அதை வைப்பதுபோல் நடித்து அருணாவை ஏமாற்றி உள்ளார்.



 

பின்பு பூஜை சாமான்கள் வாங்கி வரவேண்டும் எனக் கூறி அவரிடமிருந்து 500 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு அங்கிருந்து அருணாவின் 10 சவரன் நகைகளுடன் தப்பித்துச் சென்றுள்ளார். பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த அருணா முதலில் ஆம்பூரிலுள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அருணா அவரது பெற்றோர் உதவியுடன் குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகரக் காவல் ஆய்வாளர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடைபெற்ற கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். 



 

மேலும் கோயிலிலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகரக் காவல் நிலைய  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.